கலிபோர்னியாவில் பாடசாலை ஆசிரியருக்கு சிறுவன் எழுதிய கடிதம் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.
தான் ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று கூறி அவர் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். மாணவர்கள் காலை முதல் மாலை வரை பள்ளியில் படித்தாலும், அவர்களை வீட்டிலும் படிக்க வைப்பதற்காக ஆசிரியர்கள் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்கள்.
அது என்னவோ, பள்ளிக்குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் என்றாலே கசப்பாகத்தான் இருக்கிறது. பள்ளியை விட்டுவந்ததும் வீட்டில் துள்ளிக்குதித்து விளையாடி நேரத்தைக் கழிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.
அதே நேரத்தில் பகலெல்லாம் படித்துவிட்டு வரும் குழந்தைகளுக்கு வீட்டில் எதுக்கு மீண்டும் படிப்பு என்று ஒரு தரப்பு கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது.
அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான செயல்களை செய்யவிடுவதே அவர்களுக்கு நல்லது என்றும் அறிவுரை கூறுகின்றனர். வீட்டுப்பாட விவாதம் நம்ம ஊரில் மட்டுமல்ல, உலகெங்கிலும் இந்த கதை தான்.
கலிபோர்னியாவில் சிறுவன் ஒருவன் வீட்டுப்பாடம் செய்யாமல், தான் ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று ஒரு கடிதத்தை அவனுடைய ஆசிரியருக்கு அனுப்பியுள்ளான். குழந்தைத்தனம் மாறாத அந்த க்யூட் லெட்டர் தற்போது இணையத்தில் பரவி ஹிட் அடித்துள்ளது.
எட்வர்ட் இம்மானுவேல் என்ற அந்த சிறுவன் எழுதிய கடிதத்தை அந்த ஆசிரியர் சிறுவனின் பெற்றோருக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கடிதம் தான் தற்போது வைரலாகியுள்ளது.
அந்த கடிதத்தில் ”நான் வாரக்கடைசியில் வீட்டுப்பாடம் எழுத விரும்பவில்லை. இது நான் டிவி பார்க்கும் நேரம், என் நண்பர்களுடன் விளையாடும் நேரம். அதுமட்டுமில்லாமல் வீட்டுப்பாடம் எனக்கு பிடிக்கவில்லை. இந்த நிஜ உலகத்தில் வீட்டுப்பாடம் என்பது ஒரு மாயை. அதனால் பயனில்லை. வீட்டுப்பாடம் கொடுப்பதை விட வேண்டும்” என்று தெரிவித்துள்ளான். இது மட்டுமில்லாமல் கடைசியாக ”இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது” என்று நீதிபதி கணக்காக அந்த கடிதத்தை அந்த சிறுவன் முடித்துள்ளான்.
கடிதத்தில் குழந்தைத்தனம் இருந்தாலும் அதில் உள்ள வார்த்தைகள் உண்மை தான் என்றும், இந்த சிறுவன் நிச்சயமாக வழக்கறிஞராக வருவான் என்றும் பலரும் நகைச்சுவையாக இந்தக்கடிதத்தை ஷேர் செய்து வருகின்றனர்.