புலிகள் காலத்தில் இருந்த சமத்துவம் இன்று தமிழர்களுக்கிடையில் இல்லையென தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்து விவகார அமைச்சர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தாலே ஈழத் தமிழர்கள் என்ற உண்மையான தமிழ்தேசிய இனம் உருவாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
வவுனியாவில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற அக தேசிய முற்போக்கு கழகத்தின் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர், “இலங்கை நாடானது தமிழர்கள், சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம் மக்களோடு இணைந்து 19 இனக்குழுக்களை கொண்டிருக்கிறது. ஆனால் அது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
அதில், சிங்களவர்கள் 75 வீதமோ அல்லது 99 வீதமாகவோ இருக்கலாம் ஆனால் அது 100 வீதமாக மாறமுடியாது. 75 உடன் 25 இணைந்தால் தான் 100 வீதமாக முடியும். அது தான் இலங்கை நாடாக இருக்கமுடியும். இதனை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.
இலங்கையின் அனைத்துப் பகுதியிலும் வசிக்கும் தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்தால்தான் ஈழதமிழர்கள் என்ற உண்மையான தமிழ்தேசிய இனம் உருவாகும். அதன்மூலமே எமது அடையாளத்தையும் இருப்பையும் நாங்கள் அறிவிக்கமுடியும்.
ஆனால் எம்மை நாமே தாழ்த்தி வைத்துகொண்டிருப்போமானால் பெரும்பான்மையான சிங்கள மக்களிடம் சம உரிமையை தாருங்கள் என்று கேட்பதற்கான தார்மீக உரிமயை நாம் இழந்து விடுவோம். எனவே எம்மை நாம் திருத்திக்கொள்ள வேண்டும்.
இன்று இருக்கின்ற பாரபட்சங்கள், தள்ளிவைப்புகள் எல்லாம் புலிகள் காலத்தில் இருக்கவில்லை. இன்று சமாதானம் வந்திருக்கின்றது என்கிறார்கள் சட்டத்தின் ஆட்சி வந்திருப்பதாக கூறுகின்றார்கள்.
ஆனால் அன்று இருந்த சமத்துவம் காணமால் போய்விட்டது. அப்படியானால் புலிகள் மீண்டும் வந்துதான் சமத்துவத்தை நிலைநாட்ட வேண்டுமா? என்று கேட்க விரும்புகின்றேன்” என்று குறிப்பிட்டார்.