சவுதி அரேபியாவில் கையடக்கத் தொலைபேசி செயலி மூலம் பெண்கள் கண்காணிக்கப்படுவதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சவுதி அரேபியாவில், பெண்களுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன. பாஸ்போர்ட் விண்ணப்பித்தல், புதுப்பித்தல், வெளிநாட்டு பயணம் போன்றவற்றுக்கு, கணவன் அல்லது குடும்பத்தின் ஆண் உறுப்பினர்களின் அனுமதி அளிக்க வேண்டும். இந்நிலையில், ‘அப்ஷெர்’ என்ற கையடக்கத் தொலைபேசி செயலி அங்கு பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த செயலி மூலம், பாஸ்போர்ட் புதுப்பித்தல், விசா பெறுவது உட்பட பல்வேறு சேவைகளை பெறலாம்.
ஆனால், இந்த செயலி பெண்களின் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் உள்ளதாக, பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. ஆனால், இதை, சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது.
‘பெண்கள், வயதானோர், சிறப்பு உதவி தேவைப்படுவோர் என, அனைத்து பிரிவினரும் இந்த செயலியை பயன்படுத்தலாம்; அவர்களது பாதுகாப்புக்காகவே கண்காணிக்கப்படுகிறது’ என சவுதி அரேபிய அரசு வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது.