இறுதிக்கட்ட போரின் போது இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பான உண்மை கண்டறியப்படத்தான் வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும். அதற்காக படையினரை நீதிமன்றில் நிறுத்துமாறு நான் கேட்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பாக தீர்மானம் கொண்டு வரப்பட்டால் அதனை இந்தியா ஆதரிக்கும் என்றே எதிர்பார்க்கிறேன் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா தெரிவித்துள்ளார்.
அண்மையில் இந்தியாவிற்கு விஜயம் செய்த சந்திரிகா, இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது-
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டவாறு பொறுப்பக்கூறலை இலங்கை நிறைவேற்றவில்லை. அதனால், இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இம்முறையும் தீர்மானம் கொண்டு வரப்படவுள்ளதாக அறிகிறேன். இந்த தீர்மானத்தை இந்தியா பெரும்பாலும் ஆதரிக்கும்.
போரின்போது இரண்டு தரப்பும் குற்றங்களை இழைத்தன. ஆனால் போர் முடிந்ததும், ஒரு தரப்பு மற்றைய தரப்பின் மீது குற்றம் சுமத்துகிறது. இராணுவம் போர்க்குற்றம் இழைத்ததை முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவே ஒப்புக் கொண்டுள்ளார். போர் வெற்றியின் பிரதான பங்கு அவருடையது. எந்த விசாரணைக்கும் தயார் என அவர் கூறிக் கொண்டிருக்கிறார். ஆனால், ராஜபக்ச குடும்பம் போர் வெற்றி தம்முடையதென கொண்டாடுகிறது.
நாட்டில் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டாலும், போர்க்குற்றம் தொடர்பான உண்மை நிலையை கண்டறிய வேண்டும். அதற்காக போர் வெற்றியை பெற்றுத் தந்த இராணுவத்தினரை நீதிமன்றில் நிறுத்துமாறு சொல்லவில்லை. உயிரிழந்த புலிகளிற்கு புத்துயிர் கொடுக்குமாறும் சொல்லவில்லை. இரு தரப்பு மோதலிலும் பாதிக்கப்பட்டவர்கள் மக்களே. மக்களிற்கு நீதியை பெற்றுக்கொடுக்க வேண்டும்“ என்றார்.