யாழில் இடம்பெற்ற பெரும் கொள்ளைச்சம்பவம் ஒன்றில் ஈடுபட்டவர் என்ற சந்தேகத்தில் இளைஞர் ஒருவர் பொறிவைத்து பிடிக்கப்பட்டு, பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இன்று (18) இந்த சம்பவம் இடம்பெற்றது.
சில வாரங்களின் முன்னர் தென்மராட்சி சாவகச்சேரியில் உள்ள ஸ்ரார் ஹொட்டல் என்ற வர்த்தக நிலையத்தில் கடந்த ஜனவரி 9ம் திகதி திருட்டு போனது. இரவில் வர்த்தக நிலையத்தின் கூரை பிரிக்கப்பட்டு, சுமார் 10 இலட்சம் ரூபா திருடப்பட்டது.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்தபோதும், கொள்ளையர்கள் சிக்கவில்லை.
இந்தநிலையில் வர்த்தக நிலைய உரிமையாளரும், கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
கொள்ளைச்சம்பவம் நடப்பதற்கு முதல்நாள், கடைக்கு வந்த ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் நோட்டமிட்டிருந்தார். அவரது உருவம் சிசிரிவியில் பதிவாகியிருந்தது. சிசிரிவியின் இருப்பிடத்தை அவர் அவதானித்ததாக வர்த்தக நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
திருட்டு இடம்பெற்ற சமயத்தில் ஒருவர் சிசிரிவியில் பதிவாகியிருந்தார். முதல்நாள் அவதானித்தவரின் தோற்றமும், அந்த தோற்றமும் ஒரே மாதிரி இருந்ததன் அடிப்படையில், அந்த தோற்றத்திற்கு உரியவரின் படத்தை சமூக ஊடகங்களின் மூலம் பகிர்ந்து, அவர் பற்றிய தகவலை கோரியிருந்தார்.
இந்த நிலையில் முல்லைத்தீவு உடையார்கட்டில் அந்த படத்திலுள்ளவர் இருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, வாகனமொன்றில் வர்த்தக நிலைய உரிமையாளரும் இளைஞர்களும் சென்றுள்ளனர். உடையார்கட்டில் குறிப்பிட்ட நபரிடம் சென்றபோது, அவர் தப்பியோடியுள்ளார். பிரதேச இளைஞர்களுடன் இணைந்து அவர் விரட்டிப் பிடிக்கப்பட்டார்.
பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திருட்டில் ஈடுபட்டதை ஒத்துக் கொண்டார். பின்னர், பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு, திருட்டு இடம்பெற்ற வர்த்தக நிலையத்திற்கு இன்று மாலை அழைத்து வரப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
அவரை சாவகச்சேரி பொலிசார் தடுத்து வைத்து மேலதிக விசாரணை நடத்தி வருகிறார்கள்.