பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான், இந்திய வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தீபக் மிட்டலுடன் கைகுலுக்க முயன்றார். அப்போது, இந்தியாவைச் சேர்ந்த தீபக் மிட்டல், `வணக்கம்’ கூறி அவரை மிரளவைத்தார்.
புல்வாமா தாக்குதலால் நாடே கொந்தளிப்பில் உள்ளது. தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்த 44 சிஆர்பிஎஃப் வீரர்களுக்கு நீதி வேண்டும் என்ற குரல் பல்வேறு தரப்பிலிருந்தும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
இந்தத் தாக்குதலுக்கு இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர். இறந்தவர்களின் குடும்பங்கள் சோகத்தில் மூழ்கியுள்ளன.
தந்தையை, மகனை, கணவனை இழந்து தவிக்கும் குடும்பங்களின் சோகம் எளிதில் விவரிக்கமுடியாதவை.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய வீரர்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடக் கூடாது என்று இந்திய ரசிகர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இந்நிலையில், இன்று சர்வதேச நீதிமன்றத்தில் குல்பூஷன் ஜாதவ் வழக்கு, விசாரணைக்கு வந்தது. இதில், இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை இணைச் செயலாளர் தீபக் மிட்டல் மற்றும் பாகிஸ்தான் சார்பில் அட்டர்னி ஜெனரல் அன்வர் மன்சூர் கான் கலந்துகொண்டனர்.
வழக்கு விசாரணை தொடங்குவதற்கு முன்பாக, இரு நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளும் சந்தித்துக் கொண்டனர். அப்போது, பாகிஸ்தான் தரப்பில் வந்திருந்த அன்வர் மன்சூர் கான், இந்திய அதிகாரி தீபக் மிட்டலுக்கு கைகுலுக்க கையை நீட்டினார்.
ஆனால் தீபக் மிட்டல், அவருக்கு கை கொடுக்க மறுத்து, இரு கைகளையும் கூப்பி `வணக்கம்’ என்றார். இதைக் கண்ட பாகிஸ்தான் அட்டர்னி ஜெனரல் மிரண்டுபோனார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றன.
புல்வாமா தாக்குதலின் எதிரொலியாக நடந்த இந்த நிகழ்வு குறித்து, `பாகிஸ்தானுக்கு மூக்குடைப்பு கொடுத்த இந்திய வெளியுறவுத் துறை அதிகாரியின் செயல் மெச்சத்தக்கது’ என்று பலரும் பதிவிட்டுவருகின்றனர்.