பீஷ்மர்
மணலாற்று காட்டை பற்றி கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். இந்த பாகத்தில் மாணலாற்று காட்டை கலக்கிய தளபதிகளை பற்றிய சில தகவல்களை தருகிறோம்.
இந்தியப்படைகள் வெளியேறிய சமயத்தில் துரதிஷ்டவசமாக நவம் மரணமாகி விட்டார். இல்லாவிட்டால் மணலாறு சிறப்பு தளபதியாக அவர்தான் நியமிக்கப்பட்டிருப்பார். நவம் மரணமான பின்னர், அவரது பெயரில் கல்விக்கூடம் ஒன்றை ஆரம்பித்து யுத்தத்தில் காயமடைந்த, அங்கங்களை இழந்த போராளிகளை கல்விகற்க வைத்தார் பிரபாகரன்.
இந்தியப்படைகள் வெளியேறிய பின்னர் 1990 இல் முதன்முறையாக முல்லை- மணலாறு மாவட்ட தளபதி என்ற பொறுப்பை விடுதலைப்புலிகள் உருவாக்கினார்கள். அதற்கு முன்னர் வரை முல்லைத்தீவு மாவட்ட தளபதிகளே இருந்தனர். முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக அன்பு நியமிக்கப்பட்டார்.
விக்டர், பசீலனின் கீழ் வளர்ந்த போராளிகளில் அன்புவும் முக்கியமானவர். இவர் மன்னாரை சேர்ந்தவர். 1990களில் முல்லை- மணலாறு மாவட்ட தளபதியாக பொறுப்பேற்றார்.
1990 மார்ச் மாதத்தில் இந்தியப்படைகள் இலங்கையை விட்டு முழுமையாக வெளியேறின. இதன்பின் பிரமேதாசாவுடன் புலிகள் பேச்சில் ஈடுபட்டனர். இது தோல்வியில் முடிய, 1ம் கட்ட ஈழமப்போர் வெடித்தது. இரண்டாம் கட்ட ஈழப்போரின் தொடக்கத்தில் மண்கிண்டிமலை இராணுவ முகாமிலிருந்து புறப்பட்ட இராணுவம் மணலாற்று காட்டில் ஆதிக்கம் செலுத்தியது. அன்பு அதனை முறியடித்தார். இராணுவம் மீது தொடராக தாக்குதல்கள் நடத்தி மணலாற்று காட்டை முழுமையாக புலிகளின் பிடியில் வைத்திருந்தார்.
அப்போது முல்லைத்தீவு மக்களை கொண்டு துணைப்படை என்ற துணை இராணுவப்பிரிவையும் உருவாக்கினார். மணலாற்று காட்டுக்குள் வழிகாட்டிகளாக செயற்பட வேட்டைக்காரர்களின் உதவி தேவைப்பட்டது. அப்படி இணைக்கப்பட்டவர்கள் சிலரது பங்களிப்பு அதிகரித்து, துணைப்படை உருவாக காரணமானது. மணலாறு காட்டுக்குள் வழிகாட்டியாக செயற்பட்ட துணைப்படை வீரர்களுள் மயில்குஞ்சு என்பவர் முக்கியமானவர். போராளிகளால் அதிகமாக நேசிக்கப்பட்டவர்.
மயில்குஞ்சு கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர். காட்டின் ஒவ்வொரு அடியையும் தெரிந்தவர். புலிகளின் காட்டு நடவடிக்கைகளிற்கு பெரும் துணையாக இருந்தவர். பின்னாளில், மணலாற்று அணிக்கு மட்டுமல்ல, விசேட வேவு அணிக்கும் பாதை வழிகாட்டியாக இருந்தார். 1998 இல் மணலாற்று காட்டில் தவறுதலான துப்பாக்கி சூட்டில் மரணமானார். அவருக்கு புலிகள் மேஜர் தர நிலை வழங்கினார்கள்.
இப்படியானவர்களை இணைத்து துணைப்படையை உருவாக்கி, இருந்த சொற்ப போராளிகளுடன் மணலாற்று காட்டை அன்பு பாதுகாத்தார். மணலாற்று காட்டுக்குள் புலிகளின் முகாம்களை விஸ்தரித்து, அங்கு பெரும் படையணிகள் தங்கியிருக்கும் வசதியை அவர்தான் ஏற்படுத்தினார். அப்போது மணலாற்று காட்டை கட்டுப்பாட்டில் கொண்டுவர படையினர் மேற்கொண்ட மின்னல் படைநடவடிக்கையையும் புலிகள் முறியடித்தனர். முறியடிப்பு தளபதியாக சொர்ணம் செயற்பட்டாலும், அன்புவும் முக்கிய பங்காற்றினார்.
அப்போதுதான் மணலாற்று காட்டிற்குள் இரண்டு துயிலுமில்லங்கள் கட்டப்பட்டன. ஜீவன், கமல் முகாம்களில் இந்தியப்படைகளுடனான மோதலில் மரணமான போராளிகளின் உடல்கள் புதைக்கப்பட்டிருந்தன. அந்த பகுதி முறையான துயிலுமில்லங்களாக அமைக்கப்பட்டன.
1993 இல் மண்கிண்டிமலை படைமுகாம் மீது இதயபூமி 1 என பெயரிட்டு நடத்தப்பட்ட தாக்குதலில் 100 இற்கும் அதிக படையினர் கொல்லப்பட்டு, பெருமளவு ஆயுதங்களையும் புலிகள் கைப்பற்றினர். பால்ராஜ், அன்பு ஆகியோர் இந்த தாக்குதலை வழிநடத்தினர்.
1993 இல் பூநகரி இராணுவ முகாம் மீதான புலிகளின் தவளை இராணுவ நடவடிக்கையில் அன்பு மரணமானார். அன்புவின் இழப்பு புலிகளிற்கு மட்டுமல்ல, மணலாற்றின் அவர்களின் ஆளுகைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியது.
அன்பை தொடர்ந்து வெள்ளை/றொபேர்ட் மணலாறு தளபதியாக நியமிக்கப்பட்டார். இவர் நெடுங்கேணியை சேர்ந்தவர். இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர் வெள்ளை. சொர்ணத்திற்கு அடுத்த நிலையில் கடாபியும், வெள்ளையும் இருந்தனர். வெள்ளை நிர்வாக பொறுப்பாளராக இருந்தார். சிறப்பான நிர்வாகத்தின் மூலம் பெயரெடுத்தவர். அன்புவின் வெற்றிடத்திற்கு, தனது கண்முண் இருந்த திறமைசாலியை பிரபாகரன் நியமித்தார்.
1995 இல் மண்கிண்டிமலை இராணுவ முகாம் மீது புலிகள் ஒரு பெரும் தாக்குதலை நடத்தினார்கள். இது பெருந்தோல்வியில் முடிந்தது. பெண்புலிகளின் சடலங்களை இராணுவம் கைப்பற்றி பெண்ணுறுப்புகளில் மரக்கட்டைகளை செருகி அட்டூழியம் செய்து, சடலங்களை புலிகள் ஒப்படைத்தனர். சுமார் 150 பேர்வரையில் புலிகள் இழந்தனர். இது பிரபாகரனை கோபங்கொள்ள வைத்தது.
இராணுவத்திற்கு பதிலடி கொடுப்பதற்கு முன்னர், தமது தரப்பில் தோல்விக்கு காரணமானவர்களிற்கு வழக்கம் போல “காற்று இறக்கி“ தண்டித்தார்.
இந்த தோல்விக்கு முக்கிய காரணம்- துணைப்படையினர். துணைப்படையினர் மூலமே திட்டம் கசிந்தது. இராணுவத்துடன் தொடர்பில் இருந்ததாக சில துணைப்படையினர் கைதாகினர். பின்னர் அவர்களிற்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது. துணைப்படையே கலைக்கப்பட்டது. வெள்ளையும் சிறப்பு தளபதி பொறுப்பிலிருந்து அகற்றப்பட்டார்.
பின்னர் 1995 இல் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்ற இராணுவம் மேற்கொண்ட இடிமுழக்கம் இராணுவ நடவடிக்கையில் புத்தூர் பகுதியில் 150 பேர் கொண்ட அணியுடன் இருந்த வெள்ளை, மீண்டும் இராணுவ முற்றுகைக்குள் சிக்கினார். அந்த முற்றுகையை உடைத்துக் கொண்டு அவர்களால் வெளிவர முடியவில்லை. அந்த சமரில் சுமார் 160 போராளிகள் மரணமானார்கள். வெள்ளையும் மரணமானார்.
வெள்ளை சிறந்த நிர்வாகி. சிறந்த போர்த்தளபதியா இல்லையா என்பதை அறுதியிட முடியாதபடி இரண்டு களங்களிலும் வேறுவேறு காரணங்களால் தோல்வியடைய வேண்டியதாகி விட்டது. அவருக்கு லெப்.கேணல் தரநிலை வழங்கப்படுமென எதிர்பார்க்கப்பட்டபோதும், மேஜர் தரநிலையே அறிவிக்கப்பட்டது. இது மணலாறு மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. மக்கள் பகிரங்கமாக தமது அதிருப்தியை வெளிப்படுத்தியதாக சொல்லப்பட்டபோதும், அதை உறுதி செய்ய முடியவில்லை.
அதேவேளை, வெள்ளையின் காலத்தில் மணலாற்று காட்டின் ஆதிக்கத்தை இராணுவம் அதிகரித்திருந்தது. இராணுவத்தின் வேவு அணிகள் புலிகளின் முகாம்களிற்கு வந்து வேவு பார்த்தனர். தனிமையிலிருந்த சில போராளிகள் கழுத்து வெட்டப்பட்டனர். புலிகளின் மூத்த புலனாய்வுத்துறை தளபதி லெப்.கேணல் மல்லி நெடுங்கேணியில் வைத்து இந்த காலப்பகுதியிலேயே கழுத்து வெட்டி கொல்லப்பட்டார்.
அன்புவை போன்ற ஒருவர் தளபதியானால்தான் மணலாற்று காட்டை மீண்டும் கட்டுப்பாட்டில் கொண்டு வரலாமென்ற நிலைமை.
வெள்ளையின் பின்னர் மணலாறு தளபதியாக யார் நியமிக்கப்படுவதென்ற கேள்வி எழுந்தபோது, பிரபாகரன் எடுத்தது அதிரடி முடிவு. 20 வயதான இளைஞனிடம் அந்த பெரும் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த இளைஞனும் இம்ரான் பாண்டியன் படையணியில் இருந்தவர்தான். பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியின் தலைவராக, 20 வயதிற்குள் முன்னேறியவர். அவரது பெயர் குமரன். இறுதி யுத்தத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களில் பட்டியலில் இருக்கிறார்.
தளபதி பால்ராஜின் நெருங்கிய உறவினர். கொக்குத்தொடுவாயை சேர்ந்தவர்.
குமரன் தளபதி பொறுப்பை ஏற்றபோது மணலாறு அணியிலிருந்த மூத்தவர்கள் பலர் அவரை பொருட்படுத்தியிருக்கவில்லை. ஆனால் சில மாதங்களிலேயே, மணலாற்று காட்டை முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். அன்புவை போன்ற திறமைசாலியென எல்லோரது பாராட்டையும் பெற்றார். குமரன் சிறந்த போர்த்தளபதியாக வளர்ந்தார். இளவயதிலேயே தன் முன்னாலிருந்த எல்லா சவால்களையும் வெற்றிகொண்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.
ஆனால் துரதிஸ்டவசமாக ஓயாதஅலைகள் 1 நடவடிக்கையில்- அவர் தளபதியாகி இரண்டு வருடங்களில்- வயிற்றில் ஏற்பட்ட பெருங்காயத்தால் அடுத்த பத்து வருடங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டியதாகி விட்டது. களத்திற்கு அவரால் திரும்ப முடியவில்லை. பெருமளவு காலத்தை வைத்தியசாலையிலும், பின்னர் வைத்திய சிகிச்சைகளுடனும் கழிக்க வேண்டியதானது. பின்னர் இறுதி யுத்த சமயத்தில்தான் களத்திற்கு திரும்பினார்.
அதன் பின்னர் அன்ரன் மணலாறு தளபதியானார். அதன் பின்னர், இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து ராஜேஷ் மணலாறு (மணலாறு தனியாகப்பட்டது) தளபதியாக நியமிக்கப்பட்டார். இருவரும் அந்தப் பொறுப்பிலிருந்து ஏன் விலக்கப்பட்டார்கள் என்பதை சில வாரங்களின் முன் குறிப்பிட்டிருந்தோம்.
கிழக்கை புலிகள் கைவிட்ட பின்னர் மணலாறு போர்முனை கட்டளை தளபதியாக சொர்ணம் பதவியேற்றார். 2008 இறுதியில் மணலாற்று காட்டை இராணுவம் முழுமையாக கைப்பற்றியது.