டுனேடின் நகரில் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் டிம் சௌதியின் அனல்பறந்த பந்துவீச்சில், பங்களாதேஷ் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து அணி.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வெனறது நியூசிலாந்து அணி.
நியூசிலாந்து அணியின் ரோஸ் ரெய்லர் சர்வதேச ஒருநாள் போட்டியில் 8 ஆயிரம் ரன்களைக் கடந்து அதிகபட்ச ரன்களைச் சேர்த்த நியூசிலாந்து வீரர் எனும் சாதனையைப் படைத்தார்.
ஆட்டநாயகன் விருதை சௌதியும், தொடர்நாயகன் விருதை மார்டின் கப்திலும் பெற்றனர்.
நியூசிலாந்து சென்றுள்ள பங்களாதேஷ் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளையும் நியூசிலாந்து அணி வென்ற நிலையில், டுனேடின் நகரில் இன்று 3வது ஒருநாள் போட்டி நடந்தது.
ரொஸ் வென்ற பங்களாதேஷ் அணியின் கப்டன் மஷ்ரபி மோர்தசா பீல்டிங்கைத் தேர்வு செய்தார். முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 330 ரன்கள் சேர்த்தது.
தொடக்க வீரர் முன்ரோ 8 ரன்களிலும், கப்தில் 29 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். 3வது விக்கெட்டுக்கு நிகோலஸ், ரெய்லர் சேர்ந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் பங்களாதேஷ் பந்துவீச்சை துவம்சம் செய்து அரைசதம் அடித்தனர். நிகோலஸ் 64 ரன்களில் ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 108 ரன்கள் சேர்த்தனர்.
அடுத்துவந்த லதம், ரெய்லருடன் சேர்ந்தார். இருவரின் வேகமான ரன் குவிப்பால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது. ரெய்லர் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.
சர்வதேச அரங்கில் தனது 47வது அரைசதத்தை ரெய்லர் நிறைவு செய்து, ஒருநாள் போட்டிகளில் 8 ஆயிரத்து 27 ரன்களை எட்டினார்.
ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து தரப்பில் முன்னாள் கப்டன் பிளெமிங் 8007 ரன்கள் சேர்த்ததே அதிகபட்சமாக இருந்துவந்தது. அதைமுறியடித்த, ரோஸ் ரெய்லர், 8026 ரன்கள் சேர்த்து, அதிகபட்ச ரன்கள் சேர்த்த நியூசிலாந்து வீரர் எனும் பெருமையைப் பெற்றார்.
2006ம் ஆண்டு ஒருநாள் போட்டியில் அறிமுகமான ரோஸ் ரெய்லர் 203 இன்னிங்ஸில் இந்த சாதனையை எட்டியுள்ளார். இவரின் சராசரி 48.34.
சிறப்பாக ஆடிய ரெய்லர் 69 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய நீஷம் அதிரடியாக ஆடி 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 37 ரன்களிலும், சான்ட்னர் 16 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு நியூசிலாந்து அணி 330 ரன்கள் சேர்த்தது. பங்களாதேஷ் தரப்பில் முஷ்தபிசுர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
331 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 47.2 ஓவர்களில் 242 ரன்களுக்கு ஆட்டமிழந்தது
நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் டிம் சௌதி, போல்ட் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோரின் வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் பங்களாதேஷ் அணி 61 ரன்களுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
6வது விக்கெட்டுக்கு சபீர் ரஹ்மான், முகமது சைபுதீன் ஆகியோர் இணைந்து அணியைச் சரிவில் இருந்து மீட்டனர். அபாரமாக ஆடிய சபீர் ரஹ்மான் 2 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் சதம் அடித்து 102 ரன்களில் ஆட்டமிழந்தார். 6வது விக்கெட்டுக்கு இருவரும் 101 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அதன்பின் சைபுதீன் 44 ரன்களிலும், மிராஜ் 37 ரன்களிலும் வெளியேறினார். பங்களாதேஷ் அணியில் 5 வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து தரப்பில் சௌதி 6 விக்கெட்டுகளையும், போல்ட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Congratulations @RossLTaylor amazing last 18 months and stellar career to date. Great player that I hope will set the bar high for the next. Well deserved and good luck over the next few months.
— Stephen Fleming (@SPFleming7) February 20, 2019