ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது.
ஞாபகமறதி நோய் என்று எல்லோராலும் அறியப்படுகிற அல்ஸைமர் நினைவுத்திறனையும் மூளை செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடியது. இந்நோயால் உலகில் 5 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த நோய் ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.
பொதுவாக பெண்களை பாதிக்கும் நோய்கள் என சில உண்டு. ஆனால், சில பிரிவுகளில் அந்த நோய்களைவிட அல்ஸைமரே பெண்களை அதிகம் பாதிக்கிறது.
அல்ஸைமரில் வயது முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால் வயது ஏற ஏற இந்நோய் பாதிப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. பொதுவாக ஆண்களைவிட பெண்களின் ஆயுட்காலம் அதிகம் என்பதால் அவர்களே இதன் தாக்குதலால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஆனால், வயதானாலே அல்ஸைமர் வந்துவிடும் என கருதுவது தவறு என சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக் காட்டுகின்றன.
பெண்களிடையே காணப்படும் மன அழுத்தப் பிரச்சனையும் அல்ஸைமருக்கு வழி வகுக்கிறது. பிரசவ கால சிக்கல்கள், மாதவிடாயை அறுவை சிகிச்சை மூலம் நிறுத்துவதும் பிற்காலத்தில் அல்ஸைமர் ஏற்படக் காரணமாகின்றன. சமூக ரீதியான பொறுப்புகள் மற்றும் காரணிகளும் இந்நோய்க்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
பெற்றோரை, குழந்தைகளை, கணவரை பார்த்துக் கொள்ளும் பொறுப்புகளும் பின்னாளில் அல்ஸைமருக்கான வாய்ப்புகளை உருவாக்குகின்றன என்கிறார் ஆரோக்கிய உடற்கூறியியல் நிபுணர் ஆன்மேரி ஷூமாக்கர்.
பெண்களின் மூளை குறித்து ஆய்வு செய்யும் திட்டத்துக்கு ஆலோசனைகளை வழங்கிவரும் ஓர் அமைப்பு, அல்ஸைமர் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டதுடன், பாலின அடிப்படையில் இந்நோய்க்கான ஆய்வுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
அல்ஸைமருடன் உள்ள ஆண்கள், பெண்களுக்கு இடையில் உள்ள மனரீதியான வெளிப்பாடுகள் மற்றும் அறிவாற்றல் ரீதியான வேறுபாடுகளை தங்கள் ஆய்வுக்கட்டுரை தெளிவாகக் கூறுவதாக இந்த ஆலோசனைக்குழு தெரிவித்திருக்கிறது. இவற்றைக் கொண்டு அல்ஸைமருக்கு மேம்பட்ட சிகிச்சையை உருவாக்கலாம் என்கிறார் பெரட்டி.
மூளையில் சேர்ந்துள்ள இருவகை நச்சு புரதங்களைக் கொண்டு அல்ஸைமர் தற்போது கண்டுபிடிக்கப்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்ட ஆண் மற்றும் பெண்ணுக்கு இடையில் இந்தப் புரதத்தின் அளவில் வித்தியாசம் இல்லை என்கிறது இந்த அறிக்கை.
ஆனால், அல்ஸைமரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அதிகளவில் அறிவாற்றல் திறன் குறைந்துள்ளது இதில் தெரிய வந்துள்ளது. ஆண்களைவிட பெண்களில் இந்நோயைக் கண்டறிந்த பிறகு பாதிப்பின் அளவு வேகமாக அதிகரிக்கக் காரணம் என்ன என்பதும் ஆராயப்பட வேண்டியுள்ளது.