அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், நானும் ஒன்றாக- ஒரே திசை நோக்கி பயணிக்க ஆரம்பித்துள்ளோம். கொழும்பிலிருந்து ஒரே உலங்கு வானூர்தியில் ஒன்றாக பயணித்தது மட்டுமல்ல, மக்களுக்கான பயணத்திலும் கடந்த சில வருடங்களாக ஒன்றாகவே பயணிக்கிறோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று (21) யாழ் வீரசிங்கம் மண்டபத்தில், நகர அபிவிருத்தி அமைச்சின் நடமாடும் சேவை இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன்-
“அமைச்சர் சம்பிக்க ரணவக்க இன்று (நேற்று) யாழ்ப்பாணம் வந்தவுடனேயே இரண்டு முக்கிய அடிக்கல் நாட்டும் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார். இதை தொடர்ந்து யாழ் நகர அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடலிலும் ஈடுபட தீர்மானித்துள்ளார். இந்த கூட்டங்களில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டுமென அழுத்தமாக அவர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையிலேயே நானும், ஈ.சரவணபவனும் இங்கு கலந்து கொண்டிருக்கிறோம்.
இங்கு உரையாற்றிய வடமாகாண ஆளுனர் சுரேன் ராகவன், இங்கு இடம்பெறும் செயற்றிட்டங்கள் ஜனநாயகமுறையில் செயற்பட வேண்டும், அதில் ஊழல் இருக்கக்கூடாது என்றார்.
நானும் அதை வரவேற்கிறேன். இங்குள்ள மக்கள் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி மேற்கொள்ளப்படும் திட்டங்களாக இருப்பதால், மக்கள் நலன் சார்ந்தவையாக இருக்கும். இதற்கு முன்னர் இவ்வாறான சந்தர்ப்பங்கள் இருக்கவில்லை. அண்மைக்காலமாகவே இவ்வாறான வாய்ப்புக்கள் எமக்கு கிடைத்துள்ளன. பல வருடங்களின் பின்னர் யாழ் மாநகரசபை தேர்தல் நடத்தப்பட்டு அதன் ஊடாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களும் இவ்வாறான செயற்றிட்டங்களில் பங்கெடுத்திருப்பது எமக்கு மகிழ்ச்சியை தருகிறது.
வடக்கு ஆளுனர் பேசும்போது, தான் அரசியல்வாதியில்லை, அதனால் சில கருத்துக்களை கூற முடியும் என பலமான அரசியல் கருத்துக்களை கூறி சென்றிருக்கிறார். அவர் அடிக்கடி இப்படித்தான் செய்வார் போல தோன்றுகிறது. அரசியல்வாதி இல்லையென கூறிக்கொண்டு, அனைத்து அரசியல் கருத்துக்களையும் கூறிக் கொண்டிருக்க போகிறார் போல தோன்றுகிறது.
ஆனால் அவருடைய கருத்தில் உண்மையுள்ளது. நானும் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும் ஒரே வானூர்தியில் பயணித்ததாக கூறியிருந்தார். ஆனால், நானும் சம்பிக்கவும் ஒரே திசையில்- யாழ்ப்பாணம் நோக்கி பயணித்திருந்தோம். நாங்கள் பயணித்த திசையில் பிழை கிடையாது. எமது மக்கள் நலன்கள் மேம்பட அபிவிருத்திகள் மட்டும் போதாது. ஆட்சி மாற்றத்தின் பின்னர் அபிவிருத்தி அரசியல், உரித்து என பயணிக்கிறோம்.
நாம் இந்த பயணத்தை 2015இலேயே ஆரம்பித்து விட்டோம். அப்போது நிஷாந்த ஸ்ரீவர்ணசிங்கவுடன் இணைந்து யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரசார பணிகளை மேற்கொண்டோம். 2015 ஆட்சி மாற்றத்திலேயே நாம் ஒன்றாக இருந்தவர்கள். மேலும் அரசியலமைப்பு வழிநடத்தல் குழுவிலும் நானும், அமைச்சர் சம்பிக்கவும் இணைந்து பயணித்தவர்கள். பௌதீக மாற்றங்கள் மட்டுமல்ல, அரசியல் உரித்துக்கள் சம்பந்தமாகவும் நாங்கள் ஒரே திசையில் பயணிக்க ஆரம்பித்து சில வருடங்களாகின்றன. அது சரியான இடத்தில் சென்றடைய வேண்டுமென்பது எமது பிரார்த்தனையாக இருக்கிறது“ என்றார்.
முன்னதாக இந்த கூட்டத்தில் உரையாற்றிய வடக்கு ஆளுனர், அண்மைக்காலமாக அரச பிரமுகர்களுடன் உலங்கு வானுர்தியிலேயே சுமந்திரன் வடக்கிற்கு வருவதை நாசூக்காக சுட்டிக்காட்டியிருந்தார்.