அழகு என்பது அகப்பொருளானாலும் பெரும்பான்மையான ஆண்களும் பெண்களும் விரும்புவது தங்களின் சருமம் பளபளப்பாகவும், மிருதுவாகவும், எந்த பருக்களோ வடுக்களோ இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே.
நம் சமையல் அறையில் இருக்கும் உணவு பொருட்களைக் கொண்டே நாம் நம் முகத்திற்கு பொலிவைக் கொண்டு வரலாம்.
அதில் முக்கிய இடம் பிடிப்பது தக்காளி. இது ஆங்கிலேயரால் நமக்கு அறிமுகப்படுத்தப் பட்டாலும் சமையலுக்கு அடுத்து இது சிறந்த அழகு சாதனப் பொருளாகப் பயன்படுகிறது.
இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சிறந்த சரும பாதுகாப்பை அளிக்கிறது.
தக்காளி வைத்து வீட்டிலேயே செய்யும் கிளென்சிங், ப்ளீசிங், மற்றும் முகபேக் எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.
1. கிளன்சிங்
இது முக அழகுக் கலையில் முதல் படியாகும்.
இதற்கு தேவையான பொருட்கள் பாதியாக வெட்டிய தக்காளி மற்றும் சர்க்கரை.
பாதியாக வெட்டிய தக்காளியை சர்க்கரையில் நன்கு முக்கி எடுத்து முகத்தில் கீழிருந்து மேலாக நன்கு தேய்க்கவும். கருமையான இடங்களில் சற்று அழுத்தம் கொடுத்து தேய்க்கவும்.
பின்னர் ஒரு மிருதுவான துணியை வெதுவெதுப்பான நீரில் நனைத்து முகத்தை ஒற்றி எடுக்கவும்.
2. பிளீச்சிங்
இதற்கு தேவையான பொருட்கள் – தக்காளி சாறு, இரண்டு தேக்கரண்டி கோதுமை மாவு, மற்றும் சிறு துளிகள் ஆலிவ் அல்லது தேங்காய் எண்ணெய்.
அனைத்து பொருள்களையும் ஒரு பேஸ்ட் போன்று கலந்து முகத்தில் தடவி அரைமணி நேரம் விடவும். பின்னர் வெதுவெதுப்பான நேரில் முகத்தை கழுவவும்.
3. முகப்பேக்
இதற்கு தேவையான பொருட்கள் – தக்காளி சாறு, துளசி பொடி ஒரு டீஸ்பூன், அரிசி மாவு ஒரு டீஸ்பூன், அரை டீஸ்பூன் முல்தானி மெட்டி இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் போல ஆக்கவும்.
இந்த கலவையை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.
இதை தொடர்ந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வர முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கரும்படலம் நீங்கும். முகம் பொலிவு பெறும்.
தக்களியினால் ஏற்படும் நன்மைகள்:
- தக்காளியை துண்டை தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
- பருக்களால் ஏற்படும் தோல் சிவத்தலை குறைக்கிறது.
- தக்காளியை மசித்து அதனுடன் கிளிசரின் கலந்து கைகளுக்கு தடவுங்கள். 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் இறந்த செல்களை நீக்கி பளபளக்கச் செய்யும்.
- முகச்சருமத்தில் இறந்த செல்களை முற்றிலும் அகற்றுகிறது.
- கரும்புள்ளிகளை நீக்குகிறது. சருமத் துளைகளையும் சுருக்கி, தூசிகள் மற்றும் அழுக்குகள் உட்புகாதவாறு தடுக்கிறது.
- ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மை கொண்ட தக்காளி சாறு, சருமத்தின் செல்களை புதுப்பித்து பொலிவடையச் செய்கிறது.
- தக்காளி சாறு முகத்திற்கு பிளீச்சிங் போல் செயல்பட்டு, பளபளப்பை அளிக்கிறது