என்னால் உருவாக்கப்பட்ட பிள்ளையே 19ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தம், எனினும் அந்த பிள்ளை எனக்குத் தெரிந்த வகையில் துன்புறுத்தப்பட்டுள்ளது என்பதை நான் கவலையுடன் கூறிக்கொள்கின்றேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி தனது தேர்தல் பிரகடணத்தில் இந்த நாட்டு மக்களிற்கு வழங்கிய உறுதிமொழிக்கு அமைய மிகவும் தூய்மையான எண்ணத்துடனும் பல எதிர்ப்பார்ப்புக்களுடனும் நாடாளுமன்றத்தில் 225 உறுப்பினர்களுள் 215 பேர் ஆதரவுடன் அரசியலமைப்பின் 19ஆவது சீர்த்திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
சுயாதீன ஆணைக்குழுக்கள் பற்றி நான் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் தவறான வியாக்கியானங்கள் செய்யப்பட்டு விமர்சிக்கப்படுவதை முற்றாக நான் நிராகரிக்கின்றேன்.
உச்ச நீதிமன்றத்திற்கும், மேன்முறையீட்டு நீதிமன்றிற்கும் நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர்கள் தொடர்பில் தமக்கு எவ்விதமான ஆட்சேபனைகளும் இல்லை.
இந்த விடயத்திற்கு தவறான அர்த்தம் கற்பித்து நீதிமன்றிக்கும், நாட்டிற்கும் என் தொடர்பில் மிகவும் தவறான பிம்பத்தை காண்பிக்க முயற்சி செய்வதை என்னால் அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.