விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என கூறியமை சம்பந்தமாக ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக சட்டமா அதிபரின் ஆலோசனை பெற்றுக்கொள்வதற்காக கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன வழக்கை மே மாதம் 10 ஆம் திகதிக்கு இன்று ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபரான ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமாயின் விடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
அவரது இந்த கருத்துக்கு எதிராக செய்யப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து, அவருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் பின்னர் வழக்கு தொடரப்பட்டது.