Loading...
மஹா சிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திந்ருது இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.
தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் – மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.
விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் – விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.
பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல், முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.
சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்? சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.விரதம் கடைப்பிடிப்போர் முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும்.
சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.
மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.
நித்ய சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.
பட்ச சிவராத்திரி: தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.
மாத சிவராத்திரி: ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும்.சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.
யோக சிவராத்திரி: திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும். யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.
மகா சிவராத்திரி: மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.
சிவராத்திரியின் போது இரவு நான்கு சாமங்களாகப் பிரிக்கப்படுகிறது. அந்த நான்கு யாமங்களிலும் சிவலிங்கத்துக்கு விசேடமாக அபிஷேகங்கள் செய்யப்படுகின்றன. அந்த யாமப் பூசைகளின் போது எவையெவற்றால் வழிபடவேண்டும் என்பதை புனித நூல்கள் எடுத்துக் கூறுகின்றன.
முதல் சாமம்: இந்த முதல்கால பூஜை, படைக்கும் தேவன் “பிரம்மா” சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த கால பூஜையில் “பஞ்ச கவ்வியத்தால்” (பசும்பால், பசுந்தயிர், பசுநெய், கோமயம், கோசாணம்) அபிஷேகம் செய்து, மஞ்சள் நிற பொன்னாடை அணிவித்தும், தாமரைப் பூவால் அர்ச்சனையும், அலங்காரமும் செய்து, பாசிப் பருப்பு பொங்கல் நிவேதனமாக படைத்து, நெய் தீபத்துடன் முதல் கால பூஜை ரிக் வேதபாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் நம் பிறவி கர்மாக்களில் இருந்து விடுபட்டு நற்பலன்களை அடையலாம்.
இரண்டாம் சாமம்: இந்த இரண்டாவது காலை பூஜையை காக்கும் தேவன் “விஷ்ணு”. சிவபெருமானுக்கு செய்யும் பூஜையாகும். இந்த காலத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தும், சந்தன காப்பு சாற்றியும், வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்தும், அர்ச்சனைகள் செய்தும், இனிப்பு பாயசம் நிவேதனமாக படைத்து, நல்லெண்ணை தீபத்துடன், இரண்டாவது கால பூஜை யஜுர்வேத பாராயணத்துடன் நடத்தப்படுகின்றது. இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் தன தானிய சம்பத்துக்கள் சேரும்.
மூன்றாம் சாமம்: இந்த பூஜை சக்தியின் வடிவமாக அம்பாள் பூஜிப்பதாகும். இந்த காலத்தில் தேன் அபிஷேகம் செய்தும் பச்சை கற்பூரம் மற்றும் வில்வ இலையைக் கொண்டு அலங்காரம் செய்தும், சிவப்பு வஸ்திரம் அணிவித்தும், ஜாதி மல்லி பூவைக் கொண்டு அர்ச்சனைகள் செய்து “எள் அன்னம்” நிவேதனமாக படைத்து, இலுப்பை எண்ணை தீபத்துடன் சாமவேத பாராயணத்துடன் பூஜை முடிக்கப்படுகிறது. இந்த காலத்திற்குரிய சிறப்பு என்றால் இதை லிங்கோத்பவ காலம் என்றும் இந்த காலத்தில் சிவபெருமானின் அடி முடியைக் காண வேண்டி பிரம்மா அன்ன ரூபமாக மேலேயும், மகாவிஷ்ணு வராக ரூபமாக பாதாள லோகத்தையும் தேடிய சிறப்புடையது இந்த காலம். இந்த காலத்தில் விரதமிருந்து பூஜிப்பதால் எந்தவித தீய சக்தியும் நம்மை அண்டாமல் இருக்க சக்தியின் அருள் கிடைக்கும்.
நான்காம் சாமம்: இந்த நான்காவது கால பூஜை முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும் அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிப்பதாக கருதப்படுகிறது. குங்குமப்பூ சாற்றி, கரும்பு சாறு & பால் அபிஷேகம் செய்தும், நந்தியாவட்ட பூவால் அலங்காரமும், அர்ச்சனையும் செய்து அதர்வண வேதப் பாராயணத்துடன் சுத்தான்னம் நிவேதனமாகப் படைத்தும், தூப தீப ஆராதனைகளுடன் 18 வகை சிறப்பு அலங்கார அபிஷேக பூஜைகள் செய்யப்படுகிறது. மிக உயர்வான இந்த மகா சிவராத்திரி விரதத்தை இருந்து சிவபெரு மானை வழிபட்டு அனைத்து செல்வத்தையும், வாழ்வில் மகிழ்ச்சியையும் அடைவோமாக!
Loading...