யாழ்ப்பாணத்தின் மணல் வளம் செறிந்த பூமி எனப்படும் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் தொடர்ந்தும் மர்ம நபர்களால் மணற்கொள்ளை மேற்கொள்ளப்பட்டுவருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதன்படி ஆழியவளை கிராமத்தில் உள்ள உலாந்தாக்காடு எனும் வனாந்தரப் பிரதேசமொன்றில் தற்பொழுது மர்ம நபர் ஒருவர் களவாக மண் அகழ்வில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
குறித்த கிராமத்திற்கு இந்த மணற்கொள்ளை எவ்வாறு வந்தது என்பதை அந்த பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் எமக்கு தகவல் தருகையில்,
”ஆழியவளை கிராமத்தின் தெற்குப் பகுதியில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஒன்றை கள்ள உறுதி போட்டு மர்ம நபர் ஒருவர் மருதங்கேணி பிரதேச செயலகம் ஊடாக பெற்றுக்கொண்டுள்ளார் என்று கிராமத்தவர்கள் சந்தேகிக்கின்றனர். குறித்த காணிக்குள் கைத்தொழில் உற்பத்தி வலையம் அமைக்கப்போவதாகவும் அதன்மூலம் கிராம மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்போவதாகவும் கூறியே இவ்வாறு அனுமதி பெற்றுள்ளார். இதற்காக செயலக அலுவலகத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் சிலர் மற்றும் ஆளியவளை கிராம உத்தியோகத்தர் ஆகியோர் உதவி செய்துள்ளனர்.
இதன்படி, வாங்கப்பட்ட குறித்த காணியைச் சுற்றி முட்கம்பி வேலி அமைக்கப்பட்டதுடன் அதனுள்ளிருந்து மண் அள்ளி விற்கப்பட்டதுடன் தற்போது காணிக்கு வெளியேயுள்ள வனாந்தரப் பகுதியில் மண் களவாக அள்ளப்படுகின்றது. குறித்த விடயம் ஆழியவளை கிராம உத்தியோகத்தர், பிரதேச அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம அபிவிருத்திச் சபை, பருத்தித்துறை பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலருக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் இதுவரை யாருமே எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.” என அவர் கூறுகின்றார்.
மேலும் மணற்கொள்ளையில் ஈடுபடுபவர் லஞ்சம் கொடுத்தே இந்த காரியத்தைத் தொடர்வதாக கூறும் அவர், இதனாலேயே யாரும் இந்த விடயத்தில் அக்கறைகாட்டாமல் இருப்பதாக குற்றம்சாட்டுகின்றார்.
இதேவேளை, அண்மையில் பருத்தித்துறை பிரதேச சபைத் தவிசாளர், பிரதேச சபைச் செயலாளர் ஆகிய இருவரும் குறித்த இடத்திற்குச் சென்று நேரடியாகப் பார்த்ததுடன் அங்கு மணற் கொள்ளைக்கான எந்தவித தடயமுமே இல்லை என கூறியதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
உலாந்தாக் காடு என அழைக்கப்படும் குறித்த வனாந்தரப் பிரதேசம் சம்மந்தப்பட்ட அதிகாரிகளால் கையகப்படுத்தப்பட்டு உடன் விசாரணைகள் முன்னெடுப்பதுடன் குறித்த மர்ம நபரின் பின்னணி குறித்த தகவல் வெளியிடப்படுவதுடன் அந்த காணிக்குள் கொண்டுவரப்படவுள்ளதாக கூறப்பட்ட திட்டம் குறித்து கிராம மக்களுக்கு வெளிப்படுத்தவேண்டும் என்றும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் களவாக ஏற்றப்படும் மணல் இயக்கச்சி, பளை பிரதேசங்களூடாக வலிகாமம் பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டு விற்கப்படுவதாக கூறும் அவர், இது தொடர்பில் மருதங்கேணி மற்றும் பளை பிரதேசங்களின் பொலிஸார் பதில் சொல்லவேண்டும் எனவும் கிராம மக்களின் சார்பாக கேட்டுள்ளார்.
மேலும், மருதங்கேணி பிரதேச செயலர் கனகசபாபதி கனகேஸ்வரன், பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ஆழியவளை அரியகுமார், ஆழியவளை கிராம அலுவலர் கிட்டினபிள்ளை சுபகுமார், ஆழியவளை அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் வேலுப்பிள்ளை பிரசாந்தன் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சந்திரலிங்கம் சுகிர்தன் ஆகியோரும் இந்த விடயத்தில் உடனடியாக கவனமெடுக்கவேண்டும் என்றும் கோரியுள்ளார்.
இதேவேளை ஏற்கனவே வடமராட்சி கிழக்குப் பகுதியில் நாகர்கோவில், குடத்தனை, மணற்காடு உள்ளிட்ட கிராமங்களில் மேற்கொள்ளப்பட்ட மணல் அகழ்வினால், குடாநாட்டின் கிழக்குக் கரை மோசமான கடலரிப்பை எதிர் நோக்கும் ஆபத்தில் இருப்பதாக புவியியலாளர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக திட்டுத் திட்டாக இருந்த பகுதிகள் அனைத்தும் பாரிய பள்ளங்களாக மாற்றப்பட்டதனால் உவர் நீரின் தேக்கம் அதிகரித்துள்ளதுடன், குடா நாட்டின் தரைக்கீழ் நீர் கட்டமைப்பில் பாரிய குடிநீர் பிரச்சினையைத் தோற்றுவித்துள்ளது.
இந்த நிலையில், உரிய வரைமுறைகள் எதுவுமே இல்லாத இதுபோன்ற கள்ளத்தனமான மணல் அகழ்வுகள் இந்த பிரச்சினையில் மேலும் பல தாக்கங்களைச் செலுத்தக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக பல மட்டங்களிலிருந்தும் கவலை வெளியிடப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.