உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியுடன் விளையாடுவது குறித்து மத்திய அரசு எடுக்கும் முடிவை நாங்கள் மதிப்போம் என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியாவுக்கு எதிரான முதலாவது T20 போட்டியில் பங்கேற்க விசாகப்பட்டினம் சென்றுள்ள இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லியிடம் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதுமா? என்று கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்க்கு பதிலளித்த அவர், “புல்வாமா தாக்குதலில் உயிரை இழந்த துணை ராணுவ படை வீரர்களின் குடும்பத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம்.
நடந்த துயர சம்பவத்தால் இந்திய அணி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளது. எங்களது நிலைப்பாடு மிகவும் எளிதானது. நாடு என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கின்றதோ அதன்படி நாங்கள் நடப்போம்.
இந்திய கிரிக்கெட் வாரியம் என்ன செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறதோ? அது தான் எங்களது அடிப்படை கருத்தாகும்.
இந்திய அரசும், இந்திய கிரிக்கெட் வாரியமும் என்ன முடிவு எடுக்கிறதோ? அதன்படி நாங்கள் நடப்போம். அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் மதித்து செயல்படுவோம். இதுவே எங்களது நிலைப்பாடாகும்” என தெரிவித்தார்.