நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கொக்கெய்ன் பயன்படுத்துகிறார்கள் என்ற இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவின் கருத்து தொடர்பாக, குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பான அறிக்கையை நாளை பிரதமரிடம் கையளிக்க தான் எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்டியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “தற்போது கொக்கெய்ன் விவகாரம் பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்றில் கொக்கெய்ன் போதைப்பொருள் பயன்படுத்தும் ஒரு உறுப்பினர்கூட இல்லை. ஆனால், அரசியல்வாதி என்ற ரீதியில் நாம் அனைத்துத் தரப்பினருடனும் பழக வேண்டியுள்ளது.
இவ்வாறு பழகுவதால் அனைத்து உறுப்பினர்களையும் கெட்டவர்கள் எனக் கூறுவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த விவகாரத்தை குற்றப்புலனாய்வு பிரிவினர் ஊடாக விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பிரதமரிடத்தில் கூறியுள்ளோம்” என மேலும் தெரிவித்துள்ளார்.