பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்து அரசாங்கத்தினது வருமானத்தை அதிகரிப்போம் என மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் திகாம்பரம் தெரிவித்துள்ளார்.
பொகவந்தலாவ பிரிட்வெல் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 155 தனிவீடுகள் அடங்கிய ‘வீ.கே.வெள்ளையன்புரம்’ புதிய கிராமத்தினை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இனறு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எமக்கென கால் அங்குலம் இடம் கூட இல்லாதிருந்த நிலையில் இந்த அரசாங்கம் சொந்த நிலமும், அவற்றில் வீட்டுத்திட்டங்களையும் தற்போது வழங்கி வருகின்றது.
லயன் வாழ்க்கையயை மாற்றியமைத்து புதிய விலாசம் வழங்கியதுடன், மேலும் பல வளர்ச்சித் திட்டங்களை எமது பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்து வருகின்றார்.
மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளமாக கிடைத்தாலும் அது போதாது. நாம் ஆரம்பித்திலிருந்து மக்களுக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம்.
அதேநேரம் பிரதமரிடம் சம்பளத்தை உயர்த்தாவிட்டால் வெளியே செல்வோம் என கூறியதையடுத்து பிரதமர் மேலும் 50 ரூபாயை வரவு செலவுத் திட்டத்தில் வழங்கத் தீர்மானித்துள்ளார்.
அந்தவகையில் பெருந்தோட்டங்களில் உள்ள தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றியமைக்கவும் நாம் போராடி வருகின்றோம்” என அமைச்சர் திகாம்பரம் மேலும் குறிப்பிட்டுள்ளார்