வவுனியா நகரசபையின் மாதாந்த அமர்வு ஹர்த்தாலுக்காக பிற்போடப்பட்டுள்ளது. அந்தவகையில், நாளை நடைபெறவிருந்த அமர்வு நாளை மறுநாளுக்கு பிற்போடப்பட்டுள்ளதாக சபையின் தவிசாளர் இ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தெரிவிக்கையில், “நாளை சபையின் மாதாந்த அமர்வு நடைபெறவிருந்தது. எனினும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதுடன், வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் கர்த்தால் ஒன்றை அனுஸ்டிப்பதற்கும் தமிழ் மக்கள் தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில் நீண்டகாலமாக தமிழ் மக்களின் முக்கிய பிரச்சினையாக காணப்படும் காணாமல் ஆக்கபட்டவர்களின் நிலை தெரியப்படுத்தப்படவேண்டும்.
அவர்களின் நியாயமான கோரிக்கைக்கு வவுனியா நகரசபை ஆதரவாக இருப்பதுடன், நாளை நடைபெறவிருந்த மாதாந்த அமர்வை பிற்போடுகின்றோம். அத்துடன் கிளிநொச்சியில் நடைபெறும் போராட்டத்தில் நாம் கலந்துகொள்ளவுள்ளதுடன் ஏனைய உறுப்பினர்களும் கலந்துகொண்டு போராட்டத்திற்கு வலுசேர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.