வாசுதேவநல்லூர் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று இரவு மாதா முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இந்த அதிசயத்தை பார்த்து மக்கள் வியப்பு அடைந்தனர்.
நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ளது வேலாயுதபுரம். இங்கு பிரசித்தி பெற்ற குருசுமலை மாதா ஆலயம் உள்ளது.
75 ஆண்டுக்கு முன் இந்த மலையில் மாதா காட்சி கொடுத்தாராம். இதைத்தொடர்ந்து அங்கு ஆலயம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது அதன் பவள விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதையொட்டி கடந்த டிசம்பர் மாதம் 29-ந் தேதி மெக்சிகோ நாட்டில் குவாடலூபே இடத்தில் உள்ள மரிய அன்னையின் புனித அங்கி இங்கு கொண்டுவரப்பட்டு அதை பக்தர்களுக்கு போர்த்தி ஆசி வழங்கினர்.
இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் மாதாவின் முகத்தில் இருந்து வியர்வை வடியத் தொடங்கியது. இதை பார்த்தவர்கள் மாதாவின் முகத்தை துணியால் துடைத்துவிட்டனர். ஆனால் வியர்வை வடிவது நிற்கவில்லை. தொடர்ந்து வந்து கொண்டு இருந்ததால், அது கீழே விழாமல் இருக்க சில்வர் கிண்ணம் ஒன்றை மாதாவின் கழுத்து பகுதியில் வைத்தனர். தொடர்ந்து கண்ணில் இருந்து வியர்வை வந்து கொண்டு இருந்தது.
இது பற்றி தகவலறிந்த சபையில் உள்ள அனைத்து மக்கள் மற்றும் சுற்று பகுதியில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மக்கள் இந்த அதிசயத்தை பார்த்து வியப்பு அடைந்தனர். சிலர் அந்த புனித நீரினை நெற்றியில் பூசி வருகின்றனர்.