ஓமானில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த நால்வர் உயிரிழந்துள்ளதுடன் மூவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தாய், தந்தை அவர்களின் மூன்று பிள்ளைகளும் மேலும் இரு பிள்ளைகளும் ஓமானின் மலைப்பாங்கான அல் ஜபல் அல் அஹ்தார் என்ற பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வேளை நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை இவ்விபத்து இடம்பெற்றது.
உயர்ரக வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் இவ்விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் அவரது இரண்டு பெண் பிள்ளைகளும் மற்றுமொரு சிறுவனும் உயிரிழந்துள்ளனர்.
அபாப் அகமட் ஷகீ (4 வயது), நவால் அகமட் ஷகீ( 9 வயது), அவர்களின் தாய் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களுடன் சென்ற மற்றுமொரு சிறுவனும் விபத்தில் உயிரிழந்துள்ளான்.
தந்தையும் மகனும் ஓமான் நிஸ்வா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படுகாயமடைந்த மற்றைய சிறுவன் கவுலா மருத்துவமனையில் (Khoula Hospital.) சிகிச்சை பெற்று வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.