இன்று செவ்வாய்க்கிழமை (26/2/2019) கடன் அடைக்க உகந்த மைத்ர முகூர்த்த நாளாகும். இது கடன் அடைக்க மிகவும் விசேஷமான முகூர்த்தம் ஆகும். மேலும் இது பைரவரை வணங்குவதற்குரிய தேய்பிறை அஷ்டமியோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பாகும். எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் எளிமையாகத் தீர்த்து வைக்கும் கால நேரமாகும். முற்காலத்தில் ரிஷிகளும் சித்தர்களும் மனிதர்களின் வாழ்க்கையின் நெருக்கடியையும், பிரச்னைகளையும் முன்பே நன்கு உணர்ந்து நமக்கு இதுபோன்ற விஷயங்களை விட்டுச் சென்றிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது.
மைத்ர முகூர்த்தம்
செவ்வாய்க்கிழமையும் அசுவினி நட்சத்திரமும் சேருகின்ற நாளில் மேஷ லக்கினம் அமைந்துள்ள நேரம் மைத்ரேய முகூர்த்தம் எனப்படும். அதேபோல் செவ்வாய்க்கிழமையும், அனுஷ நட்சத்திரமும் சேருகின்ற நாளில் விருச்சிக லக்கினம் அமைந்துள்ள நேரமும் மைத்ரேய முகூர்த்தமாகின்றது. மேற்படி காலங்களில் லக்கினமும் நட்சத்திரமும் அமைந்து செவ்வாய்க்கிழமை அமையாது போனாலும் 75 சதவித பலன்களைப் பெறலாம். செவ்வாய்க்கிழமையும் சேர்ந்து அமைந்தால் நிச்சயமாக முழுப்பலன்களை பெறுவது நிச்சயம்.
மைத்ர முகூர்த்த நேரம் 26.2.2019 செவ்வாய் இரவு 11.29 முதல் நள்ளிரவு 1.41 வரை உள்ள விருச்சிக லக்ன நேரம் கடன் அடைக்க உகந்த நேரமாகும். மைத்ர முகூர்த்த நேரத்தில் கடனை அடைப்பது கடன் தீர்க்க சிறந்த வழியாகும். என்றாலும் தற்காலங்களில் கடனை ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டுமே அடைக்க வேண்டிய நிலையில் இருப்பதால் மைத்ர முகூர்த்த நேரத்தில் முருகப்பெருமானை வணங்கி கடன் விரைவில் அடைய வேண்டும் என பிரார்த்தனை செய்து கடனில் சிறு பகுதியையாவது தனியாகப் பூஜை அறையில் எடுத்து வைத்துவிட்டு பின் கடன் அடைக்க வேண்டிய நாளில் எடுத்து வைத்த தொகையை முருகன் கோயிலுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட்டு, பின்னரும் அடைத்துவிடலாம்.
கடன் தொல்லை
இன்று கடன் பிரச்னை என்பது இல்லாத நபர்களே இல்லை எனும் அளவுக்கு கிரெடிட் கார்ட் கலாசாரம் ஆதிக்கம் செலுத்துகிறது. அதனால் கையில் பணம் இல்லாவிட்டாலும் தகுதிக்கு மீறி பொருட்களை வாங்கி அவஸ்தைப்படுவது பலருக்கு சர்வ சாதாரணமாகிவிட்டது. கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என கம்பர் ராமாயணத்தில் கடன் தொல்லையை உவமையாகச் சொல்லியிருக்கிறார். கடன் தொல்லையை காலைச் சுற்றிய பாம்பு என்பர். அந்நிய கலாசாரத்தின் மோகத்தால் தகுதிக்கு மீறிய வாழ்க்கை முறை பலரை கடனாளியாக்கி நடுத்தெருவிற்குக் கொண்டுவந்து நிறுத்திவிடுகிறது. நிம்மதியாகச் சென்றுகொண்டிருக்கும் வாழ்கையில் பணத்தேவையால் வரும் துன்பங்களில் கடன் தொல்லைதான் மிகப்பெரிய பிரச்னையாக அமையக்கூடியது.
ஜோதிட ரீதியாகக் கடனாளியாகும் அமைப்பு யாருக்கு?
ஒருவர் எப்போதும் கடனாளியாக இருப்பதில்லை. சூழ்நிலை கடனாளியாக்கிவிடுகிறது. அந்த சூழ்நிலை ஜோதிடத்தில் எப்படி அமைகிறது என பார்ப்போம்.
1. ஜோதிடத்தில் ஆறாம் பாவத்தை கடன் பற்றி கூறும் பாவகமாகக் கூறப்பட்டிருக்கிறது. காலபுருஷனுக்கு ஆறாமிடமாகக் கன்னி அமைந்துள்ளதால் கன்னி ராசியில் அமர்ந்த கிரகமும் புதனோடு சேர்ந்த கிரகமும் புதனின் வீட்டில் நிற்கும் கிரகமும் கடனின் தன்மையைப் பற்றிக் கூறும் அமைப்பாகும்.
2. ஜாதகப்படி லக்னாதிபதி ஆறாம் இடத்தில் பகைபெற்றோ தீயகிரகங்களின் சேர்க்கை/பார்வை பெற்றோ அல்லது தனித்தோ அமர்ந்து திசை/புத்தி நடைபெற்றால் அவருக்கு அந்த காலகட்டம் முழுவதும் வம்பு/வழக்கு கடன் தொல்லைகள் ஏற்பட்டு வாழ்கையில் நிம்மதி சீர்குலையும்.வாழ்கையில் போராட்டங்கள் இருந்துகொண்டே இருக்கும்.
3. லக்னாதிபதி ஆறாம் வீட்டிலும் ஆறாவது வீட்டின் அதிபதி லக்னத்திலும் பரிவர்த்தனை பெற்று அமர்ந்தாலும் அவர்களுக்கு கடன் பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் இருந்துகொண்டே இருக்கும்.
4. லக்னாதிபதி பலமாக இருந்து ஜெனன ஜாதக ஆறாம் பாவாதிபதி தசாபுத்தி நடைபெற்றால் திருமணம் போன்ற ஏதோ ஒரு காரணத்திற்காக கடன் வாங்கி திரும்ப அடைத்திடுவார்.
5. லக்னாதிபதி பலமற்ற நிலையில் ஆறாம் பாவாதிபதி தசாபுக்தி நடைபெறும்போது கடன் வாங்கினால் திரும்ப அடைக்க மிகவும் கஷ்டப்படுவர். ஆறாம் பாவத்தோடு தொடர்பு கொள்ளும் கிரகங்களையும் ஆறாம் பாவாதிபதி நிற்கும் வீட்டினையும் கொண்டு ஒருவர் எந்தகாரணத்திற்க்காக கடன் வாங்குகிறார்கள் என்பதை அறியமுடியும்.
6. ஜெனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலமற்று இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி பன்னிரெண்டாம் பாவத்தில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். சம்பாதிக்கும் எதுவும் மிஞ்சாது.
7. ஜெனன ஜாதகத்தில் இரண்டாம் பாவாதிபதி ஆறாம் வீட்டில் நின்றால் அவருடைய வாழ்க்கை கடனிலேயே கழியும். ஆறாம் பாவாதிதி லக்னத்தில் நின்றால் ஜாதகர் கேட்காமலே கடனை கொடுத்து கடனாளியாக்கிடுவர். லக்னாதிபதி பலமற்ற நிலையில் இரண்டாம் வீட்டின் அதிபதி குருபகவான் பார்வையின்றி ஆறாம் வீட்டில் அமர்ந்து திசை நடைபெற்றால் அவர் சம்பாத்தியம் முழுவதும் கடன்/வட்டி கட்டியே வீணாகும். இவர் யாருக்கும் கடன் ஜாமீன் போடக்கூடாது. மீறி வாக்குறுதி கொடுத்தால் அந்த கடன் இவர் தலையில் வந்துதான் விடியும். இரண்டாம் வீட்டின் அதிபதி பலமற்று இருப்பவர்கள் ஆன்லைனில் கண்ட உணவுகளை ஆர்டர் செய்து கடனாளியாவதோடு ஆரோக்கியத்தைக் கெடுத்துக்கொள்வதையும் காணமுடிகிறது,
8. ஒருவர் ஜெனன ஜாதகத்தில் உள்ள சனைச்சரனை கோச்சாரக சனி கடக்கும்போது வாழ்க்கை நிலையில் மாற்றம் ஏற்படும். பல தோல்விகள், வருமானம் இழப்பு, கடன் வாங்கும் சூழல் ஏற்படும். ஒருவர் ஜாதகத்தில் சனி கேது எந்த விதத்தில் இணைவு பெற்றாலும் அது வாழ்க்கையில் வருமானமற்ற நிலையை ஏற்படுத்தும். மேலும் மிகப்பெரிய கடனை ஏற்படுத்தி வாழ்க்கையில் விரக்தி நிலையை ஏற்படுத்தும். கோச்சாரக சனியும் கேதுவும் ஜெனன சனி மற்றும் கேதுவை கடக்கும்போது இதன் தாக்கத்தை உணரமுடியும்.
9. தனகாரக குரு ஒருவர் ஜாதகத்தில் 1/5/9 அதிபதியாகி ஆறு மற்றும் எட்டில் நின்றாலும் குரு பகவான் ஆறு/எட்டு/பன்னிரண்டாம் அதிபதியாகி தசாபுக்தியை நடத்தினாலும், ஆறாம் வீட்டை கோசாரக குரு கடந்தாலும் பெரும் கடனாளியாக நேரும். குருபகவான் ஜெனன ஜாதகத்திலோ கோச்சாரத்திலோ ஆறாமிடத்தில் நின்று விட்டால் கேட்காமலே கடன் கொடுத்து கடனாளியாக்கிவிடுவர்.
10. ஒருவர் ஜாதகத்தில் தன காரக குரு நீசம் மற்றும் வக்ரம் பெற்றிருந்தால் அவர்கள் தனது வாழ்நாளில் கோசாரக சனி, ராகு, கேது போன்ற கிரஹங்கள் வக்ர குருவை கடக்கும் காலத்தில் பெருங்கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். ஒருவர் ஜாதகத்தில் ஆறு/எட்டு/பன்னிரெண்டு அதிபதிகள் தசா/புத்தி/அந்தர நாதர்களாக தசையை நடத்தும் காலத்தில் விரையம், நோய் போன்ற காரணங்களால் கடன் பிரச்னை ஏற்படும்.
11. ஒருவர் ஜாதகத்தில் கர்ம காரகன் எனப்படும் சனைச்சரனை கோசாரக கேதுவும், ஜெனன கேதுவை கோச்சாரக சனியும் கடக்கும் போது வேலையிழப்பு, வருமான இழப்பு போன்ற காரணங்களால் வாழ்க்கையின் நிலை மாறி கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.
12. மிதுனம், துலாம், கும்ப ராசிகளுக்கு ஆறாம் அதிபதி நீர் ராசியாக வருவதாலும் எதிரிகளின் வீடாக இருப்பதாலும் ஆறாம் அதிபதியின் தசா புத்தி காலங்களில் கடனால் அவதிப்பட நேரும்.
எப்போது கடன் வாங்கக் கூடாது?
ஒருவர் ஜாதகத்தில் குரு கால புருஷனுக்கு ஆறாம் பாவமான கன்னியில் அல்லது ஜாதக ஆறாம் பாவத்தில் கோச்சார ரீதியாக பயணம் செய்யும்போது கடன் வாங்கக் கூடாது. குரு தான் இருக்கும் வீட்டை வளர்ப்பார். எனவே ஆறாம் பாவத்தில் நிற்கும் போது கடனை வளர்த்திடுவார்.
குரு ஸர்ப கிரகங்களுடன் சேர்ந்து நிற்கும் போது புதிய கடன்கள் வாங்கவோ அல்லது கடன் அடைக்கவோ முயற்சி செய்யக் கூடாது.
ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி ஆகியவை நடைபெறும்போது கடன் வாங்க முயற்சி செய்யக் கூடாது.
சந்திர பலமற்ற நாளில் கடன் வாங்கும் முயற்சியில் இறங்கக்கூடாது. முக்கியமாக செவ்வாய்க் கிழமையிலும் குளிகை காலத்திலும் கடன் வாங்கவே கூடாது. மாற்றாகக் கடன் அடைப்பது சிறந்ததாகும்.
கடன் பிரச்னையில் இருந்து தீர்வு
கடன் தீர்ப்பதில் கேது பகவானும் செவ்வாய் பகவானும் மிகவும் பெரும்பங்காற்றுகின்றனர். கேதுவின் அதிதேவதை வினாயகரை வணங்குவது, செவ்வாயின் அதிதேவதை முருகனை வணங்குவது, கேது செவ்வாய் சேர்க்கை பெற்ற மைத்ர முகூர்த்தத்தில் கடன் அடைப்பது விரைவில் கடன் அடையச் சிறந்த வழிகளாகும்.
எந்த காரணத்திற்காகக் கடன் வங்கினாலும் அது அடைய சனைஸ்வர பகவானின் அருள் தேவை. பாவத்பாவபடி சனைச்சரனின் கும்பராசி கால புருஷனுக்கு ஆறுக்கு ஆறாக இருப்பதால் அவர் அனுக்கிரகம் செய்தால்தான் கடன் அடைக்கமுடியும். சனைஸ்வர பகவான் கன்னியில் அமர்ந்துவிட்டால் மலச்சிக்கல் நோய் ஏற்பட்டு “காலைகடனை” கூட அடைக்க முடியாத நிலை ஏற்படும்.
கடனிலிருந்து விடுபட தொடர்ந்து சனைஸ்வர பகவானை வழிபடுவது அவசியமாகும். .
ருணம் எனில் கடன் என்று பொருள். லட்சுமி நரசிம்மரைக் குறித்த ருண விமோசன ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்து வந்தால் எல்லாவித கடன்களும் அடைபடும். லட்சுமி நரசிம்மரின் திருவருள் கிட்டும். ஸ்வாதி நட்சத்திரத்திலும் செவ்வாய்க்கிழமைகளிலும் வரும் பிரதோஷம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு ஏற்ற காலம் ஆகும்.
செவ்வாயின் உக்ர ரூபத்தை கொண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மருக்கு பாணக நிவேதனம் செய்வித்தாலும் கடன் விரைவில் அடையும்.
ருத்ர மூர்த்தியும் நரசிம்மரும் சேர்ந்த உருவமான ஸ்ரீ சரபேஸ்வர மூர்த்தியை பிரதோஷ காலத்தில் முக்கியமாக ருண விமோசன பிரதோஷ காலத்தில் வழிபடத் தீராத கடன் தீரும்.
கடன் தீர்க்கும் கால பைரவர்
ஜோதிடத்தில் வீரத்தினை குறிக்கும் கிரகம் செவ்வாயாகும். மேலும் நெருப்பு, ஆயுதங்கள், ராணுவம், பாதுகாப்பு, போர் வீரர்கள், காவலர்கள், தீயணைப்புத்துறை ஆகியவற்றின் காரகரும் செவ்வாய் ஆகும். சாகசம் செய்பவர்கள், சாதனையாளர்கள் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜோதிடத்தில் செவ்வாய் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாக திகழும் செவ்வாய் கால புருஷனுக்கு லக்னாதிபதியாகவும் ஆயுள் பாவமான அஷ்டமாதிபதியாகவும் விளங்குகிறார். காலபுருஷனும் கால பைரவரும் ஒன்றே என்கிறது ஜோதிட சாஸ்திரம். சிவனின் ருத்ர ரூபமான கால பைரவரும் செவ்வாயின் ஆதிக்கம் பெற்றவர் என்பது இதனால் புலனாகிறது.
ஜோதிடத்தில் ஆறு, எட்டு, பன்னிரண்டாம் பாவங்கள் வலுத்து அதனால் நோய், கடன் தொல்லைகள், எதிரிகள், வழக்குகள் போன்றவற்றால் மீளமுடியாத பிரச்னைகளை சந்தித்துவருபவர்கள் ஸ்ரீ பைரவ மூர்த்தியை வழிபடுவது, கால பைரவாஷ்டகம் பாராயணம் செய்வது, சொர்ணாகர்ஷன பைரவ ஹோமம் செய்வது போன்றவை சிறந்த பயனளிக்கும். மேலும் புற்றுநோய் போன்ற உயிர் கொல்லி நோய் உடையவர்கள் ஸ்ரீ காலபைரவரை வணங்கி வருவதால் நோய் நீங்கி மரணபயம் போகும்.
என்ன நேயர்களே! நாளை மைத்ர முகூர்த்தமும் தேய்பிறை அஷ்டமியும் இணைந்த நேரத்தில் கடனில் சிறு பகுதியையாவது அடைத்துவிடுவீர்கள் தானே! வாழ்த்துக்கள்.
– அஸ்ட்ரோ சுந்தரராஜன்