போதைப்பொருள் பயன்படுத்தும் அமைச்சர்களோ நாடாளுமன்ற உறுப்பினர்களோ அதியுயர் சபையில் இருப்பார்களெனின் அவர்களுக்கு வழங்கக்கூடிய உச்சபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டும் என சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது கலந்துக் கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் ஸ்ரீலங்காவிலேயே மிகப் பெருமளவான போதைப்பொருள் தொகை கைப்பற்றப்பட்டது. 3 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. இவை கைப்பற்றப்படாவிட்டிருந்தால் என்ன நடைபெற்றிருக்கும். யாருக்கு வந்து சேரும்? இவ்வாறு போதைப்பொருட்கள் கிராமபுறங்களுக்கும் வந்து சேரும் நிலையே உருவாகிக் கொண்டிருந்தது.
எனினும் இவ்வாறு போதைப் பொருட்களை கைப்பற்றும் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரலாற்றில் இதுவரையிலும் பொலிஸாருக்கு பொறுப்பாகவிருந்த அமைச்சர் மேற்கொள்ளாத விடயத்தை, முறையான தலைமைத்துவத்தின் கீழ் வழங்கியுள்ளார். பொலிஸாருக்கும் எந்தவொரு தாக்கமும் இன்றி தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் காரணத்தாலேயே பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து தெளிவாக தமது நடவடிக்கையினை மேற்கொண்டு செல்கின்றனர். அதேபோல பாதாள உலகக் குழு தலைவர் உள்ளிட்ட அனைவரையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் முறையாக மேற்கொண்டுள்ளதை நாம் தெளிவாக மேற்கொள்ள வேண்டும்.
அவ்வாறான நிலையில் தற்போது வெவ்வேறு கதைகள் பேசப்பட்டு வருகின்றன. இவ்வாறு போதைப்பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கைகள் மேறக்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் செயற்பாடுகளிலும் சிலர் ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போது நாடாளுமன்றில் உள்ள அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதைப்பொருட்களை பயன்படுத்துகின்றனராம். எனக்கென்றால் தெரியாது. அவ்வாறு பயன்படுத்துவோர் இருப்பார்களெனின் அவர்களின் பெயரைக் குறிப்பிட வேண்டும், அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். குறிப்பாக வழங்கக்கூடிய உச்சபட்ச தண்டனையினை வழங்க வேண்டும்.