நாடளாவிய ரீதியில் அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளிலும் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது அதிவேக நெடுஞ்சாலைகளில் பணம் கொடுக்கும் முறையே நடைமுறையில் உள்ளது. எனினும் கட்டுநாயக்க அதிவேக வீதியில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறை காணப்படுகிறது.
இந்த நிலையிலேயே குறித்த முறைமையை விருத்தி செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அதிவேக வீதிக்குள் நுழைந்த பின் ஏனைய அதிவேக வீதிக்கு இந்த வசதியை பயன்படுத்த முடியும் என்பதுடன், இதற்காக விசேட அட்டை விநிநோகிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலத்திரனியல் கொடுப்பனவு முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதன் மூலம் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்போருக்கு பல நன்மைகள் கிடைக்கும் என்பதால் இது அவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.