இலங்கை ஆசிரியர் சேவைச் சங்க ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை இன்று (26) முன்னெடுத்திருந்தனர்.
ஆசிரியர் சங்கத்தின் வடக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஒரு மணி நேரம் ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதன் போது முரண்பாடுகளை நீக்கி, சம்பளத்தை அதிகரிக்கவும், கொள்ளையடித்த 30 மாத நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்கு, மாணவர்களின் ஒழுக்கத்தைப் பேணும் ஆசிரியர்களைப் பாதுகாப்போம், கற்பித்தலுக்கு இடையூறு விளைவிக்கும் மேலதிக வேலைகளை இரத்துச் செய், இல்லாமல் செய்த ஓய்வூதிய சம்பளத்தை மீண்டும் வழங்கு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
மேலும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளைத் தாங்கியவாறு கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடபட்டிருந்தனர். இப் போராட்டத்தில் சங்கத்தின் தலைவர் மகிந்த ஜெயசிங்க உள்ளிட்ட சங்கத்தின் அதிபர்கள் மற்றும் ஆசியரியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இக் கோரிக்கைகளை சம்மந்தப்பட்ட தரப்பினர்கள் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென்றும் இல்லையேல் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் இதன் போது தெரிவித்துள்ளனர்.