பிரித்தானியாவின் ஹரோ நகர மேயரை பதவி நீக்குமாறு புலம்பெயர் இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையை பூர்வீகமாக கொண்ட கரீமா மரிகார் ஹரோ நகர மேயராக செயற்பட்டு வருகிறார். இந்நிலையில் அவரை உடனடியாக பதவி விலகுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் இலங்கைக்கு வருகை தந்திருந்த மேயர், உயர்மட்ட பாதுகாப்பு தரப்பினருடன் சந்திப்புக்களை நடத்தியிருந்தார்.
இந்த சந்திப்பிற்கு எதிர்ப்பு வெளியிட்டு ஹரோ நகரத்தில் வாழும் தமிழ் மக்கள் அவரை பதவி விலகுமாறு கூறி வருவதாக பிரித்தானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கையின் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க, சர்ச்சைக்குரிய பிரிகேடியர் பிரியங்க பெர்ணாடோ உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இதன்போது இறுதிக்கட்ட போரினை நிறைவு செய்யும் நடவடிக்கையில் திறமைப்பட செயற்பட்ட இராணுவத்தினருக்கு பாராட்டும் மரியாதையும் செலுத்தியிருந்தார்.
பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் போது கரீமா மரிகார், ஹரோ நகர மேயருக்குரிய சீருடை அணிந்திருந்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹரோ மேயராக இராணுவ கலந்துரையாடலில் ஈடுபட்டமைக்கே எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஹரோ நகர மேயரின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்தப் பகுதியில் இலங்கைத் தமிழர்கள் 49 பேரின் கையொப்பதுடன் மனு கையளிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் 28 வருடங்களாக வாழ்ந்து வரும் கரீமா மரிகார், கடந்த மே மாதம் ஹரோ நகர மேயராக தெரிவு செய்யப்பட்டார்.
2010ஆம் ஆண்டு முதல் ஹரே நகர சபையை பிரதிநிதித்துவம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.