இந்திய பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
திமுக தலைமையில் ஒரு கூட்டணியும், அதிமுக தலைமையில் மற்றொரு கூட்டணியும் அமைய உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்னதாக மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்த நடிகர் கமல்ஹாசன் அந்தக் கூட்டணிகளில் இடம் பெறவில்லை.
மாறாக அவர் வேறு ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய கட்சியின் முதலாம் ஆண்டு விழாவைக் கொண்டாடிய கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த கமல்ஹாசன், “நன்றி @rajinikanth, என் 40 ஆண்டு கால நண்பரே. நல்லவர் துணை நின்றால் நாற்பது எளிதே, நாளை நமதே,” என ரஜினியிடம் மறைமுகமாக ஆதரவு கேட்டு டிவீட் போட்டிருந்தார்.
ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்காததால், வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டார்.
எனவே, வரும் பாராளுமன்றத் தேர்தலில் கமல்ஹாசனுக்கு ரஜினிகாந்த் ஆதரவு அளிக்கலாம் என அரசியல் வட்டாரங்களில் பேச்சு எழுந்தது.
தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளரும் ஆன விஷால், ரஜினி, கமல் கூட்டணி அமைந்தால் சிறப்பாக இருக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
” நடிகர் சங்க நிகழ்ச்சிக்காக அல்ல, எந்த ஒரு ஸ்டாரின் வரவேற்புக்கு அல்ல, மல்டி ஸ்டார் படத்திற்கு அல்ல, வேறு எதற்கும் அல்ல, 2019 லோக் சபா தேர்தலில் ரஜினி சாரும், கமல் சாரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆம், அது ஒரு மாற்றத்தைக் கொடுக்கும்,” எனத் தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசன் எதிர்பார்க்கும், விஷால் ஆசைப்படும் இந்த புதிய கூட்டணி அமையுமா ?.