43 வருடங்களாக நடைமுறையில் இல்லாத மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதன் மூலம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிராந்தியத்தில் மனித உரிமைகளை மீறிய ஜனாதிபதி என்ற நிலையை ஏற்படுத்த உள்ளதாக ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் சட்டத்தரணிகள், அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அதில், மரண தண்டனை நிறைவேற்ற தீர்மானத்தை ஜனாதிபதி கைவிட வேண்டும் என அவர்கள் கோரியுள்ளனர்.
13 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற போவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளமையானது, சர்வதேச நியமங்களுக்கு எதிரானது.
அத்துடன் மரண தண்டனையை நிறைவேற்றுதனால் மாத்திரம் குற்றங்களை கட்டுப்படுத்த முடியாது என்றும் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மரண தண்டனை காரணமாக குற்றங்கள் குறையவில்லை என்பதற்கு அமெரிக்காவை உதாரணமாக கூற முடியும்.
இந்த நிலையில் கிராம மட்டத்தில் அறிவூட்டல்களை வழங்குவதன் மூலம் போதைப்பொருள் பாவனையை தடுக்க ஜனாதிபதி செயற்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் கோரியுள்ளனர்.