இலங்கை அரசு பொறுப்புக்கூறல் விவகாரத்தில் வேகமாக செயற்படவில்லையென இலங்கைக்கான அமெரிக்க தூதர் அலைனா பி.டெப்லிஸ்ட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாடு என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்தபோதே, இவ்வாறு தெரிவித்திருந்தார்.
“பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் நகர்வுகள் மிக மெதுவாகவே உள்ளன. ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா வெளியேறியுள்ள நிலையிலும் கூட, கடந்த காலத்தில் இலங்கையுடன் இணைந்து செயற்பட்டதன் அடிப்படையில் தொடர்ந்தும் அமெரிக்கா தனது ஆதரவை வழங்கும்.
மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வின் பிரேரணையில் உள்ள காரணிகள், இலக்குகளை அர்ப்பணிப்புடன் அடைதல், நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், உண்மைகளை கண்டறிதல் மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்களை கையாள வேண்டியது இன்றியமையாததாக உள்ளது. இலங்கை அந்த இலக்குகளை எட்ட, முழுமையாக ஒத்துழைப்போம்.
பொறுப்புக்கூறல் விடயம், மக்கள் எதிர்பார்ப்பதை விட மிக மெதுவாகவே நகர்வதாக நாங்கள் நினைக்கிறோம். எதிர்காலத்தில், இந்த விடயம் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்க்கிறோம்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த நாம் அமைத்துள்ள இலக்குகள் மற்றும் மனித உரிமை பேரவையின் தீர்மானம் மிகச்சிறந்த நகர்வுகள் என்றே நாம் நினைக்கிறோம். அவற்றை நிறைவேற்றினால் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் உண்மையை கண்டறிதலில் நிறைய முன்னேற்றங்களை அடைய முடியும் என தெரிவித்துள்ளார்.