மாசி திருவிழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் கெந்தமாதனபர்வதம் மண்டபகப்படியில் புறப்பாடாகியதும், கோயில் நடை சாத்தப்பட்டது.
மாசிமகா சிவராத்திரி விழா யொட்டி பிப்.,25ல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் கொடி ஏற்றப்பட்டு, திருவிழா துவங்கியது. 3ம் நாள் மாசி விழாவான நேற்று காலை 6:30க்கு கோயிலில் இருந்த வெள்ளி பூதம், வெள்ளி கிளி வாகனத்தில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியா விடை அம்மன் எழுந்தருளி பஞ்சமூர்த்தியுடன், கெந்தமாதன பர்வதம் மண்டகபடிக்கு புறப்பாடாகியதும் கோயில் நடை சாத்தினர்.
இதனால் பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
சுவாமி, அம்மன், கோயில் ரதவீதி, திட்டகுடி வழியாக பர்வதம் சென்ற போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். பின் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாரதனை நடந்தது.
பின் இங்கிருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகி இரவு 8 மணிக்கு கோயிலுக்கு வந்ததும் நடை திறக்கப்பட்டு அர்த்தசாம, பள்ளியறை பூஜை நடந்ததும், மீண்டும் கோயில் நடை சாத்தினர். பின் இன்று (பிப்.,28) அதிகாலை கோயில் நடை திறந்து வழக்கம் போல் பூஜை நடைபெற்றது.