முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொட உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தரணி சனத் விஜயவர்த்தனவினால் அட்மிரல் வசந்த கரன்னாகொட சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதை மார்ச் மாதம் 7ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் முன்னாள் அரச தலைவரும் தற்போதைய எதிர்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலமான 2008 – 2009ஆம் ஆண்டுகளில் கொழும்பின் தெஹிவளை கொட்டாஞ்சேனை ஆகிய பிரதேசங்களில் 5 தமிழ் மாணவர்கள் உட்பட 11 பேர் வெள்ளை வானில் கடத்திச் சென்று காணாமல் ஆக்கப்பட்டனர்.
இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவங்களுடன் ஸ்ரீலங்காவின் கடற்படை புலனாய்வுப் பிரிவுக்கு தொடர்பிருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளை ஆரம்பித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஸ்ரீலங்கா கற்படையின் புலனாய்வுப் பிரிவு அதிகாரியான லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட புலனாய்வாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கடற்படையின் அதிகாரிகளான 12பேர் சந்தேகநபர்களாக பெயரிடப்பட்டிருக்கின்றனர். அந்த வகையில் இது தொடர்பிலான வழக்கு விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இறுதியாக கடந்த 20 ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம், கடத்தப்பட்ட 11 பேரில், ஐந்து பேர் திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள கன்சைட் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் சிலர் சாட்சியமளித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
கரன்னாகொடவின் கைது தொடர்பில் அன்றைய தினம் நீதிமன்றத்தில் விடயங்களை தெளிவுபடுத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினர், இளைஞர்கள் கடத்தப்பட்டதாகவும் இரகசியமாக தடுத்துவைக்கப்பட்டு காணாமல் ஆக்கியதாகவும் கடற்படையின் புலனாய்வு பிரிவைச் சேர்ந்த இருவர் கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில் சாட்சியம் அளித்தார்கள் என கூறியுள்ளனர்.
முன்னாள் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையா, 2017 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வழங்கிய வாக்குமூலத்தின் பிரகாரம், திருகோணமலையிலுள்ள கன்சைட் முகாமில் தசநாயக்கவின் மேற்பார்வையின் கீழ் இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை வசந்த கரன்னாகொட அறிந்திருந்தார் எனவும் கூறியிருந்தார்.
கன்சைட் முகாமில் இடம்பெற்ற கொலைகள் தொடர்பில் பின்னரே தாம் அறிந்துகொண்டதாக தெரிவித்த ட்ராவிஸ் சின்னையா, அது தொடர்பில் முழுமையாக பொறுப்புகூற வேண்டியது முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவே எனவும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு வழங்கிய வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி கிருலப்பனை பொலிஸார், பொல்ஹேன்கொட மற்றும் பெத்தகான பகுதிகளிலுள்ள கரன்னாகொடவின் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.
எனினும் அந்த இரண்டு இடங்களிலும் அவர் இருக்காத நிலையில், தற்போது உச்ச நீதிமன்றத்தில் தம்மை கைதுசெய்வதற்கு தடைவிதிக்க கோரி அடிப்படை உரிமை மனுவை கரன்னாகொட சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த மனுவானது பிரதம நீதியரசர் நளின் பெரேரா, நீதியரசர்களான பிரியந்த ஜயவர்தன மற்றும் முர்து பெர்ணான்டோ ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வழக்கு விசாரணைகளில் பங்கேற்பதற்கு விரும்பவில்லை என, நீதியரசர் பிரியந்த ஜயவர்தன அறிவித்திருந்தார்.
அதனையடுத்து, இந்த மனு மீதான பரீசிலனையை மார்ச் 7 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை, 11 பேர் கடத்தப்பட்ட குற்றம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட உயர்மட்ட இராணுவ அதிகாரியான பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜயகுணவர்தன, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.