பாதையோரத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, இயற்கை கடன் கழிக்க சென்றவரின் மோட்டார்சைக்கிள் மாயமாகியுள்ளது. ஓரிரு நிமிடத்தில் மோட்டார் சைக்கிள் மாயமானதில் அதிர்ச்சியடைந்துள்ள உரிமையாளர், வாழைச்சேனைப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
எரிக்கிலம்காட்டுப்பாலத்தடி, மூர்க்கர்கல் எனும் வயல் பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை 27 இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மீராவோடையைச் சேர்ந்த இலவத்தம்பி முஹம்மத் அஸ்லம் என்பவர் தனக்குச் சொந்தமான BDY 7186 எனும் இலக்கம் கொண்ட கறுப்புற நிற பல்ஸர் மோட்டார் சைக்கிளில் பிற்பகல் 2.30 மணியளவில் மூர்க்கர்கல் பகுதிக்குச் சென்றுள்ளார்.
அங்கு பாதையோரமாக மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, இயற்கை கடன் கழிக்க ஆற்றுப் பக்கமாகச் சென்றார். ஓரிரு நிமிடத்தில் திரும்பி வந்து பார்க்க, அங்கு மோட்டார் சைக்கிள் இருக்கவில்லை.
சுற்றியிருந்த காட்டுப் பக்கமாகவும் வயல் பக்கமாகவும் தேடிப் பார்த்தபொழுதும் மோட்டார் சைக்கிளைக் கண்டு பிடிக்க முடியவில்லை என்று தனது பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து வாழைச்சேனைப் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.