ஜப்பானில் 268 கிராம் நிறையில் பிறந்த குழந்தை, தற்போது தீவிர சிகிச்சைக்குப் பிறகு நலமாக உள்ளது. பீட்ரூட் ஒன்றின் நிறைக்குச் சமமாகப் பிறந்த குழந்தை, உலகத்திலேயே மிகவும் சிறிய குழந்தை என்று கருதப்படுகிறது.
டோக்கியோவில் உள்ள கெயோ பல்கலைக்கழக மருத்துவமனையில், 24 வாரத்தில் ஜப்பானியத் தாய்க்குப் பிறந்த ஆண் குழந்தை, அப்போது வெறும் 268 கிராம் நிறையில் இருந்துள்ளது. சராசரி இளைஞரின் கைக்குள் அடங்கிவிடக் கூடிய அளவுக்கு சிறியதாக அக்குழந்தை இருந்தது. கருப்பையில் குழந்தை வளர்வதை நிறுத்தியதால் இந்நிலை நேர்ந்ததாகக் கூறப்பட்டது.
இதையடுத்து 5 மாதங்களுக்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து குழந்தை தற்போது 3.238 கிலோ நிறையில் உள்ளது. நல்ல முறையில் உணவை எடுத்துக் கொள்வதால், குழந்தையை டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய மருத்துவர் தகேஷி அரிமித்சு, ”குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சை வழங்கினோம். குழந்தைகள் சிறியதாகப் பிறக்க நேர்ந்தாலும் மேம்பட்ட சிகிச்சை மூலம் அவர்கள் நல்ல நிலைமையில் வீடு திரும்ப முடியும்” என்றார்.
இதுகுறித்துப் பேசிய குழந்தையின் தாய், ”இப்போது என்னால் மகிழ்ச்சி என்று மட்டுமே சொல்ல முடியும். ஏனெனில் உண்மையாக அவனால் உயிர் வாழ முடியும் என்பதை அப்போது நான் நம்பவில்லை” என்றார்.
முன்னதாக 2009ல் ஆண் குழந்தை ஒன்று, 274 கிராம் நிறையுடன் பிறந்ததே உலக சாதனையாக இருந்தது. ஜெர்மனியில் 2015ல் 252 கிராம் நிறையில் பிறந்த பெண் குழந்தை, நலமுடன் இருந்து சாதனை படைத்துள்ளது.
நிறை குறைவாக பிறக்கும் குழந்தைகளில் பெண்களை விட, ஆண் குழந்தைகளுக்கு உயிர் வாழும் வாய்ப்பு குறைவு.
ஜப்பானில் பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.