பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார்.
குறித்த வயோதிபர் மூச்சுத்திணறி சாய்ந்த நிலையில் மரணித்த சம்பவம் ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் இடம்பெற்றுள்ளது.
நேற்று இரவு நேர இஷாத் தொழுகையின்போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன் போது, ஏறாவூர் அல்முனீறா பெண்கள் பாடசாலை வீதியை அண்மித்து வசித்து வந்த உமர்லெப்பை மஹ்மூதுலெப்பை என்ற 76 வயதுடையவரே இவ்வாறு மூச்சுத்திணறி மரணித்துள்ளார்.
சம்பவம் பள்ளிவாசலின் சிசிரிசி கமராவில் பதிவாகியுள்ளது.
மேற்படி சம்பவம், பள்ளிவாசலில் தொழுகை நடாத்தும் மார்க்க அறிஞர் தொழுகை நடாத்திக் கொண்டிருக்கும்போது ஏனைய தொழுகையாளிகளுடன் இரண்டாவது வரிசையில் நின்று தொழுது கொண்டிருந்த குறித்த வயோதிபர் திடீரென சரிந்து நிலத்தில் சாய்ந்துள்ளார்.
இதன் பின்னர், வரிசையில் நின்ற ஏனைய தொழுகையாளிகள் தம் தொழுகை முடிந்து வயோதிபரைத் தூக்கி முதலுதவி அளிக்க முற்பட்டபொழுது அவரது உயிர் ஏற்கெனவே பிரிந்து விட்டமை தெரியவந்துள்ளது.
இவ்வாறு மரணித்தவர், 6 பெண் பிள்ளைகளின் தந்தையானரென்றும், 25 வருட காலம் மத்திய கிழக்கில் சாரதியாகத் தொழில் புரிந்தவர் என்றும் இறுதித் தறுவாய் வரை இவர் தேகாரோக்கியத்துடன் இருந்தவர் என்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அவரது ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை ஏறாவூர் காட்டுப்பள்ளி மையவாடியில் இடம்பெற்றது.
மேலும், ஏறாவூர் ஜாமியுல் அக்பர் ஜும்மாப் பள்ளிவாசலில் தொழுது கொண்டிருக்கும்போது, தொழுகையாளி ஒருவர் மூச்சுத்திணறி மரணித்த முதல் சம்பவம் இதுவென பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.