புதிய தற்காலிக பெற்றோர் விசா ஏப்ரல் 17 ஆம் திகதியிலிருந்து அவுஸ்திரேலியாவில் நடைமுறைப்படுத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இப்புதிய பெற்றோர் விசாவுடன் தொடர்புபட்ட மற்றுமொரு சட்டமுன் வடிவுக்கு கடந்த ஆண்டு நவம்பரில் நாடாளுமன்ற அனுமதி கிடைத்ததையடுத்து இப்புதிய தற்காலிக பெற்றோர் விசா நடைமுறைக்கு வரவுள்ளது.
இதன்பிரகாரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 15 ஆயிரம் தற்காலிக பெற்றோர் விசாக்கள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் எதிர்வரும் ஏப்ரல் 17ம் திகதி முதல் தமது பெற்றோருக்கான விசா விண்ணப்பங்களை பிள்ளைகள் தாக்கல் செய்யலாம் என குடிவரவு அமைச்சர் David Coleman அறிவித்துள்ளார்.
Sponsored Parent (Temporary) subclass 870 பிரிவில் அவுஸ்திரேலியாவில் வாழ்பவர்கள் தமது பெற்றோரை 3 வருடங்களுக்கு வரவழைப்பதற்கு 5000 டொலர்களைச் செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 5 வருட விசாவுக்கு 10,000 டொலர்களும், அதற்கு மேலதிகமாக 10,000 டொலர்கள் செலுத்துவதன் மூலம் மேலும் 5 வருடங்களால் இந்த விசாவை நீடித்துக்கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர்கள் அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாகக் குடியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை குறித்த விசாவுக்கு விண்ணப்பம் கோருவோர்கள் குடிவரவுத் திணைக்களம் மதிப்பீடொன்றை மேற்கொண்டு அதற்கான அனுமதி கிடைத்த பின்னரே பெற்றோரை வரவழைப்பதற்கான விண்ணப்பத்தைத் தாக்கல் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.