திருகோணமலை – ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10ம் கட்டைப்பகுதியில் இன்று காலை பவுசர் ஒன்றும் துவிச்சக்கர வண்டியும் மோதியதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த வயோதிபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் மொறவெவ,10ம்கட்டை பகுதியைச் சேர்ந்த வல்பொல சாலலாகே ஆரியபால எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மாதம்பை பகுதியிலிருந்து திருகோணமலைக்கு பெற்றோல் ஏற்றுவதற்காக சென்ற பவுசர் துவிச்சக்கர வண்டி சாரதி குறுக்கே திருப்ப முற்பட்ட போது இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.
பவுசர் சாரதியான ஹலாவத்தை,மேச்சின்வத்த பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவரை கைது செய்துள்ளதாகவும் இன்றைய தினம் நீதவான் வாசஸ்தலத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
உயிரிழந்தவரின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சட்ட வைத்திய பரிசோதனை முடிவடைந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.விபத்து தொடர்பில் மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.