Loading...
கோடை காலம் மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல், மே மாதங்கள் வரை நீடிக்கும். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் கோவையில் வெயில் சுட்டெரிக்க தொடங்கி உள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் பல்வேறு நோய்கள் பொதுமக்களை தாக்கும் அபாயம் உள்ளது. இந்த நோய்களில் இருந்து தப்பிக்கும் முறைகள் குறித்து கோவை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கூறியதாவது:-
Loading...
கோடை கால வெயிலுக்கு சின்னம்மை, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் ஏற்படும். வெயிலின் தாக்கத்தால் உடலில் தண்ணீரின் அளவு குறைந்து விடுகிறது. இதனால் உயர் ரத்த அழுத்தம், தூக்கமின்மை, நீர்க்கடுப்பு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் உருவாகும். இதில் இருந்து தப்பிக்க தினசரி, 2½ முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் குழந்தைகளுக்கு தடிமனான ஆடைகளை உடுத்தக் கூடாது.
தோல் வறட்சியானால், சிறுநீர் சரியாக கழிக்க முடியாது. வியர்வை அதிகமாக வரும்போது, வியர்க்குருவும் வரும். இதனால் உடலில் தடிப்பு போன்று இருக்கும். அதை தவிர்க்க, தினமும் காலை, மாலை என இரண்டு முறை குளிக்க வேண்டும்.
வெயில் காலத்தில் வெளியில் சென்று வந்த உடன், குளிர்ந்த தண்ணீரை குடிக்க கூடாது. வெதுவெதுப்பான தண்ணீரை அருந்தலாம்.
கோடையில் சிறுநீர்க்கடுப்பு அதிக தொல்லை தரும். அளவுக்கு மீறி வியர்வை வெளியேறுதல் மற்றும் தேவையான அளவு தண்ணீர் குடிக்காதது இதற்கு முக்கிய காரணம் ஆகும். உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது சிறுநீரின் அளவும் குறைந்துவிடும். சிறுநீரின் மூலம் வெளியேற வேண்டிய உப்புகள் கடினமாகி, சிறுநீர் பாதையில் படிகங்களாக படிந்துவிடும்.
இதன் விளைவுதான் நீர்க்கடுப்பு. அதிகளவு தண்ணீர் குடித்தால் இந்த பிரச்சினை இருக்காது.
வெயில் காலத்தில் இளநீர், மோர், பதநீர், நுங்கு போன்ற குளிர்ச்சியானவற்றை எடுத்துக்கொள்ளலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் ஆகிய தாதுக்கள் உடலில் உள்ள வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்ப நிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தை குறைக்கிறது.
அத்துடன் தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி, ஆரஞ்சு, திராட்சை, கிர்ணி போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ பழச்சாறுகளையோ சாப்பிடலாம்.
இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள் வெயிலில் அதிக நேரம் பயணிக்க வேண்டியிருந்தால், கண்களுக்கு ‘சன் கிளாஸ்’ அணிந்து கொள்ளலாம். இதுபோன்று செயல்பட்டால் கோடை வெயிலால் ஏற்படும் நோய்களில் இருந்து தப்பிவிடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Loading...