பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானி உடனடியாக விடுவிக்கப்பட்டதால், இரு அணு ஆயுத நாடுகளிடையே ஏற்பட்ட பதற்றம் தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நெருக்கடியில், போர் மூளும் அபாய பார்வையில் வெற்றி பெற்றது யார்?
வியாழன் அன்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்அமைதி நல்லெண்ணத்தின் அடையாளமாக சிறைபிடிக்கப்பட்ட விமானியை பாகிஸ்தான் விடுவிக்கும் என்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அறிவிக்கிறார்.
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி அந்த நேரத்தில் விஞ்ஞானிகளின் கூட்டத்தில் உரையாற்றி கொண்டிருக்கிறார். இம்ரான்கானின் அறிவிப்பு வெளியான சில விநாடிகளில் பிரதமர் மோடி பாகிஸ்தானை கேலியாக விவரிக்கிறார்” முன்னோடி (பைலட்) திட்டம் நிறைவு பெற்றது, இதை நாம் உண்மையாக்கவேண்டும் என்று சூசகமாக குறிப்பிட்டார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக குரல் எழுப்பினாலும் மற்றவர்கள், இந்த இறுமாப்பு கூற்றை கேட்டு சுவையற்றதாக கருதினார்கள்.
கடந்த செவ்வாய்க்கிழமை, இந்திய போர் விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம் என்று சொல்லப்படும் பகுதியில் குண்டுவீசிய சில மணி நேரங்களில், பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்தலுக்கான பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரம் ஆவேசம் நிறைந்த பிரசாரமாக இருந்தது.
” இந்த நாடு பாதுகாப்பான கரங்களில் இருக்கிறது என்று நான் உறுதியளிக்கிறேன்” என்று பிரதமர் பேசியதும், காதை செவிடாக்கும் கரவொலியைப் பெற்றார்.
24 மணி நேரத்துக்குள் பாகிஸ்தான் திருப்பித்தாக்கி, இந்திய போர் விமானத்தை பாகிஸ்தான் நிர்வகித்து வரும் காஷ்மீர் பகுதியில் சுட்டு வீழ்த்தி அதன் விமானி அபிநந்தன் வர்த்தமானை சிறைபிடித்தது.
பதற்றத்தை தணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இரு தரப்பும் இருந்த நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் விமானியை விடுவிப்பதாக முன்வந்தார்.
பாகிஸ்தானின் முன்னாள் இந்திய தூதரும், கேந்திர விவகாரங்களின் நிபுணருமான கே.சி. சிங் ” இம்ரான் கானின் ரிவர்ஸ் ஸ்விங் பந்துவீச்சில் மோடியின் பா.ஜ.க.வில் உள்ள கழுகுகளும், இந்தியாவும் நிலைகுலைந்து போவார்கள்”கூறினார்.
ரிவர்ஸ் ஸ்விங் என்பது கிரிக்கெட் விளையாட்டில் வீசப்படும் குறிப்பிட்ட பந்து வீச்சு கலை, பந்து ஆட்டக்காரரை விட்டு விலகிப் போவதற்கு பதிலாக அவரை நோக்கி திரும்பும் என்பதே இதன் சிறப்பு. இம்ரான் கான், கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டிருந்த காலத்தில் உலகில் அருமையான கிரிக்கெட் விளையாட்டு வீரர்களில் ஒருவராவார்.
பாதுகாப்பு நெருக்கடி
2014ல் பிரதமர் பொறுப்பை ஏற்ற பின்னர், அனைத்தையும் தனது பேச்சாற்றலால் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் நரேந்திர மோடி.
அவருக்கு துணையாக உள்ளூர் ஊடகங்களும் இருந்தன. அவரது பலம்வாய்ந்த தேசியவாதி என்ற பிம்பத்தை விசுவாசத்துடன் அவை தூக்கிப்பிடித்து வருகின்றன.
எனவே, மோடி தானே மக்களிடம் பேசுவதற்கு பதிலாக அதிகாரிகளை விட்டு ஏன் பேசச்சொன்னார் என்று பலரும் வியக்கின்றனர். அதுவும் இந்த சம்பவத்தால் அணு ஆயுதம் வைத்துள்ள அண்டை நாட்டுடன் உடனடியாக போர் மூளும் என்ற வதந்தி பரவி வந்த நிலையில் நாடே கத்தி மேல் நடக்கும் சூழலில் அவர் பேசாமல் மற்றவர்களை பேச அனுமதித்தது ஏன் என்று வியப்பு தெரிவித்துள்ளனர்.
இவர்களில் எரிச்சலடைந்தது நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகளே. நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பாதுகாப்பு நெருக்கடி சூழலில், மோடி தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் பங்கேற்றதையும், செல்போன் செயலி ஒன்றை அந்த நேரத்தில் வெளியிட்டதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
பாகிஸ்தானும் மோடிக்கு ஆதரவாக குருட்டுத்தனமாக உடனடியாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி விமானியை சிறைபிடித்தது என்று பலரும் நம்பினர்.
அடுத்த இரு நாட்களில் இம்ரான் கானும், பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அழைப்புவிடுத்தார். அமைதி பற்றி பேசினார். விமானியை விடுவிப்பதாக அறிவித்தார்.
“பாகிஸ்தான் பிரதமர் கண்ணியமான அடக்கத்துடன், கருத்துவேறுபாடுகளை பேசித்தீர்ப்போம் என்ற பிம்பத்தை வெளிப்படுத்தினார்” என்கிறார் கே.சி. சிங்.
இந்திய விமானியை இந்தியாவிடம் அடுத்த நாளே ஒப்படைப்பதாக அவர் அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் என்றும் அவர் கூறுகிறார்.
இம்ரான் கான் தொடர்ந்து தன் நாட்டு மக்கள் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பேசினார். ஊடகங்களுக்கு தொடர்ந்து தகவல்களை வழங்கினார்.
பாகிஸ்தான் பிரதமர், இந்தியாவை மடக்குவதற்கு முயற்சிக்காமல் நிலைமையை சமாளிக்க, பிரச்சினையில் இருந்து தீர்வு காண வழி ஒன்றை அனுமதித்து நியாயமான தலைவராக தென்பட்டார் என்று இந்தியாவில் உள்ள பல்வேறு திறனாய்வாளர்களும் கூறுகின்றனர்.
ஆனால், மோடி தனது கட்டுப்பாட்டை இழந்துவிட்டார். ” நீங்கள் எப்படி சுற்றினாலும், பாகிஸ்தானின் தாக்குதல் இந்தியாவை வியப்பிற்குள்ளாக்கியது” என்கிறார் வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான ஸ்ரீநாத் ராகவன்.
இதை கவனியுங்கள். இந்தியா பாகிஸ்தான் மீது நள்ளிரவு தாக்குதலை நடத்தியது. இந்த தாக்குதல் புல்வாமாவில் கடந்த பிப்ரவரி 14ந்தேதி நடைபெற்ற 40 இந்திய சி ஆர் பி எஃப் வீரர்கள் பலியாக காரணமான தீவிரவாதத் தாக்குதலுக்கு பதில் கொடுக்கும் விதமாக நடத்தப்பட்டது.
ஆனால், பாகிஸ்தான் பதிலடி உடனடியாக அமைந்தது. இந்தியா தாக்குதல் நடத்திய மறுநாளே பட்டப்பகலில் துடுக்காக பதிலடி தாக்குதலை நடத்தியது.
‘பழிக்குப்பழி வாங்குவது உத்தி அல்ல’
விமானி சிறை பிடிக்கப்பட்டது, மோடியும் அவரது அரசும் சொன்னது மற்றும் எதிர்பார்த்தது அனைத்தையும் தூக்கி வீசியது.காலையில் பேசிய உற்சாகம் தலைகீழாகி, விமானியை தாயகம் அழைத்து வருவதைப் பற்றி பேச வைத்துவிட்டது.பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி 30 மணிநேரத்திற்கு மேல்தான் இந்திய ராணுவத்தின் விளக்கம் வந்தது.மோடிக்கும் அவரது அரசுக்கும் இந்த பிரச்சினையில் என்ன செய்ய வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் போனது.
இறுதியில், போலித் துணிச்சல் காட்டி சப்பைக்கட்டு கட்டுவது மிகவும் எளிதாக பின்னோக்கி பதிலடி வழங்க தொடங்கிவிடும்.இது போன்ற நிலைக்கு தள்ளப்பட்ட முதல் பிரதமர் மோடி அல்ல. இதற்கு முன்னதாக அடல் பிஹாரி வாஜ்பாய், டாக்டர் மன்மோகன் சிங் போன்றோர் எல்லையில் இத்தகைய கோபமூட்டும் சூழலை எதிர்கொண்டுள்ளனர்.திருப்பித்தாக்க வேண்டிய சூழலுக்கு அவர்கள் தள்ளப்பட்டாலும், அத்தகைய ஆற்றலைப் பெற்று இருந்தாலும் அவர்கள் நிலைமையை தணிக்க நன்கு ஆராயப்பட்ட முடிவுகளை மேற்கொண்டனர்.பழிக்குப்பழி வாங்குவது என்பது உத்திசார்ந்த குறிக்கோளாக இருக்கக்கூடாது. உணர்வுகளின் அடிப்படையில் எந்த உத்தியும் உந்தப்பட்டால், அது தோல்வியில் முடியும்” என்கிறார் ராகவன்.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான ஊடகங்கள் இந்திய விமானி விடுதலை செய்யப்பட்டது மோடியின் வெற்றி என்ற ரீதியில் பின்னிவிட்டனர்.புல்வாமா தாக்குதலுக்கு பின்னால் உள்ள மாபெரும் புலனாய்வு தோல்வி குறித்தும் பாகிஸ்தானால் பட்டப்பகலில் எப்படி வான் பாதுகாப்பை தாண்டி வர முடிந்தது என்றும் வெகு சிலரே கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்திய இராணுவத்தால் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக தானாக ராணுவத் தாக்குதலில் ஈடுபடுவோம் என்ற இயல்பான தோற்றத்தை உருவாக்கி பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை இந்தியாவில் தவிர்ப்பது என்ற உத்திசார் இலக்கினை எட்ட முடியவிலலை என்கிறார், முன்னணி பாதுகாப்பு பகுப்பாய்வாளர் அஜய் சுக்லா
“இதுவரை, பாகிஸ்தான் தன்னால் இந்தியாவிற்கு இணையாக செயல்பட முடியும் என்று காட்டியுள்ளது, இதனால் இந்திய ராணுவம் பாகிஸ்தானால் ஈடுசெய்ய முடியாத அளவு தண்டனையை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இருப்பினும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு, நிதி ஒதுக்காமல், இந்தியாவின் இராணுவம் வெறுமையாக உள்ளது. இது எந்த அளவில் என்றால், மோடியால் பாகிஸ்தானுக்கு விரைவாகவும், ரத்த சேதமின்றியும் பதிலடி கொடுக்க ராணுவத்தின் ஆற்றலை நம்ப முடியாத நிலை உள்ளது” என்று அவர் கூறுகிறார்.
மேலும், பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதம் குறித்தும் தெளிவாக தெரியவில்லை.இந்த தாக்குதலில் சுமார் 300 பேர் பலியானார்கள் என்று இந்திய ஊடகங்களில் சில தாராளமாக கூறிவந்த நிலையில் இந்த தாக்குதலில் எவ்வளவு பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் இந்திய அதிகாரிகளிடம் தெளிவாக இல்லை.என்ன நடந்தாலும், இந்த விவகாரத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளை நரேந்திர மோடி வெறித்துப்பார்த்துக் கொண்டிருப்பார். இந்த விவகாரத்தில் தான் தோற்றுவிட்டோமோ என்ற அச்சத்தில்.
ஆனால் உண்மையில் அப்படியல்ல. இந்த போர்த் தோற்றத்தில் இம்ரான் கான் வெற்றிபெற்று விட்டார் என்று அவரது தொகுதியிலும், இந்தியாவில் சில இந்தியர்களும் கருதலாம், ஆனால் மோடி இந்தியாவில் தனக்கு இருக்கும் அடித்தளத்தைக் கொண்டு இந்த விவகாரத்தை கட்டுப்படுத்தலாம்.
“மோடியை நம்பாதவர்களை விட இது மிகப்பெரிய தளம். ஊடகங்கள் அனேகமாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், அவர் இந்த போர் தோற்றம் உண்டாவதற்கான நிகழ்வில் தோற்றுவிட்டார் என்று நான் நம்பவில்லை.
அவர் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ளச் சென்றுவிட்டாலும், இம்ரான் கானை இவ்வாறு பேசச் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டார் என்றும் அழுத்தம் காரணமாக விமானியை விடுவித்தார் என்றும் அவரது ஆதரவாளர்கள் நம்புவார்கள்” என்கிறார் கட்டுரையாளர் மற்றும் எழுத்தாளர் சந்தோஷ் தேசாய். மிகச் சமீபத்தில் இவர் மதர் பயஸ் லேடி- மேக்கிங் சென்ஸ் ஆஃப் எவரிடே இந்தியா என்ற நூலை இயற்றியுள்ளார்.
இந்த கருத்துப்போரில் யார் வெற்றிபெற்றாலும், இந்த வருத்தமான கதையில் ஒரே நம்பிக்கைக் கோடு என்னவென்றால், இரு தரப்பிலும் யாரும் போரை விரும்பவில்லை என்பது தான் என்கிறார், எம்.ஐ.டி. அரசியல் அறிவியல் பேராசிரியர் விபின் நரங்.
” அவர்கள் கியூபாவின் ஏவுகணை இயக்கத்தின் நெருக்கடியை உணர்ந்து, சில தவறான நடவடிக்கைகள் கட்டுப்படுத்த முடியாத நிலையை எட்டலாம் என்பதை அறிந்து வைத்துள்ளனர்” என்று அவர் கூறுகிறார்.
எனவே இரு தரப்பினரும் தங்கள் பணிகளை தொடரலாம், பிரச்சினை தீவிரமடைவதை தவிர்க்க பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்கலாம், இந்தியாவும் தனது நடவடிக்கைகளை தவிர்க்கலாம்” என்று அவர் கூறுகிறார்.
நன்றி பிபிசி
இந்த கட்டுரை ஒரு பொது எழுத்தாளர் Rajan அவர்களால் வழங்கப்பட்டு 02 Mar 2019 எமது செய்திப்பிரிவால் பிரசுரிக்கப்பட்டது. இந்த கட்டுரையின் எந்தவொரு தயாரிப்பிலும் Theevakam செய்திப்பிரிவு பங்கேற்கவில்லை.