ரயில் வழித்தடத்தில் பயணித்தல் தொடர்பாக தற்போது நடைறையில் உள்ள சட்டத்தை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி ரயில் வழித்தடத்தில் பயணிப்பவர்களைக் கைதுசெய்து சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக ரயில் பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் வழித்தடத்தில் பயணிப்பதன் காரணமாக நாளொன்றுக்கு இரண்டு அல்லது மூன்று பேரளவில் உயிரிழக்கின்றனர்.
இதற்கமைய, கடந்த இரண்டு மாதங்களுக்குள் மாத்திரம், 64 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு அதிகாரி அநுர பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் வழித்தடத்தில் பயணித்தல் மற்றும் தொலைபேசிகளைப் பயன்படுத்தியவாறு பயணித்தல் என்பனவே இந்த விபத்துகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளன.
புதிய இயந்திர ரயில்கள் பாரியளவு சத்தமின்றி பயணிக்கின்றன. எனவே, ரயில் வழித்தடத்தில் பயணிக்கும் ரயில்கள் குறித்து அதிகளவு அவதானம் ஏற்படாது.
இவ்வாறான நிலைமைகளைக் கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.