கிழக்கு மாகாணத்தின் சகல விலங்குகள் கொல் களங்களையும், இறைச்சிக் கடைகளையும் வழமைபோன்று திறந்து அவற்றின் நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்லுமாறு மாகாண கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது விடயமாக அத்திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும்,
சட்ட விரோதமாகவும், எதுவித அதிகாரமுமின்றியும் விலங்கு கொல்களம் மற்றும் இறைச்சி கடைகள் ஆகியவற்றை மூடிவிடுமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளால் வழங்கப்பட்ட கட்டளையை நிராகரித்து தங்களுடைய அதிகார பிரதேசத்தில் உள்ள சகல விலங்குகள் கொல் களங்களையும், இறைச்சி கடைகளையும் வழமைபோன்று திறந்து அவற்றின் நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதன் மூலம் பொதுமக்களின் இறைச்சிகத் தேவை நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யமாறும் சகல உள்ளூராட்சி மன்றங்களையும் கால்நடைப் பண்ணையாளர்களையும், இறைச்சிக் கடைக்காரர்களையும் தயவுடன் கேட்டுக் கொள்வதாக மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயத்தில் தங்களுக்குத் தேவையான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு இத்திணைக்களம் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆடு,மாடுகளிலிருந்து மனிதர்களுக்கு இறைச்சி மூலமாகவோ அல்லது பால் மூலமாகவோ அல்லது வேறு எவ்வகையிலோ மனிதர்களுக்குத் தொற்றக் கூடிய எதுவித கால்நடை நோய்களும் இம்மாகாணத்தில் பதிவாகவில்லை என்பதால் ஆட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி என்பனவற்றை அச்சமின்றி உட்கொள்ளலாம் என்பதையும் பொதுமக்களுக்கு அறியத் தருகின்றேன்.
கிழக்கு மாகாணத்தில் மாடுகளுக்கு தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அதிகளவில் மாடுகள் இறப்பததாகவும் அதன் காரணமாக விலங்கறுமனைள் மற்றும் மாட்டிறைச்சிக் கடைகளை மூடிவிடுமாறு கிழக்கு மாகாணத்தின் கிண்ணியா, மூதூர், தம்பலகாமம், ஓட்டமாவடி, ஏறாவூர், வாழைச்சேனை ஆகிய ஊர்கள் உள்ளிட்ட பல பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகள் உத்தரவுகளைப் பிறப்பித்து வருவதாக பொதுமக்கள் மற்றும் ஏனைய பல பொது நிறுவனங்களாலும் எமது கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
கால்நடைகளுக்குத் தொற்று நோய்கள் ஏற்பட்டுள்ளமை காரணமாக விலங்கறுமனைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் ஆகியவற்றை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடும் அதிகாரம் சுகாதார வைத்திய அதிகாரிக்கோ அல்லது பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களுக்கோ எந்தவித சட்டத்தின் கீழும் வழங்கப்படவில்லை.
அவர்களால் வழங்கப்பட்டுள்ள விலங்கறுமனைகள், இறைச்சிக் கடைகள் ஆகியவற்றைத் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ மூடும் உத்தரவாதமானது சட்ட விரோதமானதும் தனது அதிகாரத்தை மீறி பொது மக்களைத் தவறாக வழி நடாத்தும் செயலுமாகும்.
கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் காரணமாக விலங்குகள் கொல் களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளை மூடவேண்டுமா அல்லது இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் 1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டம் மற்றும் அதன் கீழ் ஆக்கப்பட்டு அதி விஷேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளின் பிரகாரம் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்திற்கும் அவரால் அதிகாரமளிக்கப்பட்டுள்ள மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளருக்கும் மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்து.
1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தினதும் அதன் கீழ் ஆக்கப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்கு விதிகளினதும் 1956ஆம் ஆண்டின் 46ஆம் இலக்க மிருக வைத்தியர்கள் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் பிரகாரம் மாடுகளுக்குத் தொற்றுநோய்கள் ஏற்பட்டுள்ளதா அல்லது இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்க மிருக வைத்திய அதிகாரிகளுக்கு மாத்திரமே உரித்தாக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களிலர் மாடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டு அதிகளவு மாடுகள் இறந்துள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரிகளினாலும் பொதுச் சுகாதார பரிசோதகர்களாலும் செய்யப்பட்டுள்ள தகவல்கள் பொய்யானதும் தவறானதும் சட்ட விரோதமானதுமாகும்.
அவ்வாறு மாடுகளுக்கு ஏற்படும் தொற்று நோய்கள் காரணமாக ஏதேனும் பிரதேசத்தில் விலங்குள் கொல் களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகனளையோ மூடவேண்டியிருப்பின் அதற்கான கட்டளை 1992ஆம் ஆண்டின 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்டத்தின் 5ஆம் பிரிவின் கீழ் அல்லது 15ஆம் பிரிவின் கீழ் கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளர் நாயகத்தால் அல்லது அவரால் அதிகாரம் அளிக்கப்பட்ட மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரப் பணிப்பாளரால் அதிவிஷேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்படல் வேண்டும்.
இதற்கு முன்னரும் இவ்வாறான வர்த்மானி அறிவித்தல்கள் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தால் பிரசுரிக்கப்பமட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் மாடுகளுக்குத் தொற்று நோய் ஏற்பட்டு அதரிகளவு மாடுகள் இறந்துள்ளதாக காரணம் காட்டி கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களின் சுகாதார வைத்திய அதிகாரிகளால் செய்யப்பட்டுள்ள பொய்யானதும் தவறானதும் சட்ட விரோதமானதுமான உத்தரவின் காரணமாக பொதுமக்கள் மத்தியிலும் கால்நடைப் பண்ணையாளர்கள் மத்தியிலும் தேவையற்ற அச்சமும் பதற்ற நிலையும் ஏற்படுத்தியுள்ளதுடன் உலக விலங்கு சுகாதார நிறுவனத்தரிற்கு அறிக்கையிட வேண்டிய தர்ம சங்கடமான நிலையும் ஏற்படுத்தப்ட்டுள்ளது.
கால்நடைகளுக்குப் போதியளவு உணவின்னை மற்றும் உணவுப் பற்றாக்குறை காரணமாகவும் மேய்ச்சல் தரையின்மை காரணமாகவும் நிலவிய அசாதாரண காலநிலை காரணமாகவும் சில பிரதேசங்களில் கால்நடைகள் இறந்துள்ளன.
எனினும், கிழக்கு மாகாணத்தின் எந்தப் பிரதேசத்திலும் விலங்குள் கொல் களத்தையோ அல்லது இறைச்சிக் கடைகளையோ மூடுவதற்கான கட்டளையைப் பிறப்பிக்க வேண்டிய அளவுக்கு மாடுகளுக்கு எதுவித தொற்று நோள்களும் ஏற்பட்டதாக இதுவரை பிரகனப்படுத்தப்படவில்லை.
ஏதேனும் பிரதேசத்தில் மாடுகள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தொற்று நோய்கள் ஏற்படுமிடத்து அது சம்பந்தமாக 1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் பிரதேசத்தரிற்குப் பொறுப்பான அரசாங்க மிருக வைத்திய அதிகாரியால் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அத்தியாவசியமாகத் தேவையேற்படின் மாத்திரம் இதற்கு முன்னரும் கால்நடை உற்பத்தி சுகாதரார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டது போன்று, 1992ஆம் ஆண்டின் 59ஆம் இலக்க விலங்கு நோய்கள் சட்ட ஏற்பாடுகளுக்கமைய விலங்குள் கொல் களத்தையோ இறைச்சிக் கடைகளையோ மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
எனினும், தற்போதைய நிலையில் கிழக்கு மாகாணத்தில் எந்தவொரு பிரதேசத்திலும் கால்நடைகளுக்கு எதுவித தொற்று நோய்களும் ஏற்படவில்லையாதலால் கிழக்கு மாகாணத்தின் எந்தவொரு பிரதேசத்திலும் விலங்குள் கொல்களத்தையோ இறைச்சிக் கடைகளையோ மூட வேண்டிய அவசியமில்லை.
இது விடயமாக மேலதிக தகவல்கள், ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பனவற்றை மாகாண கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தினைத் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.