18 வயதை பூர்த்தி செய்த அனைத்து இளைஞர் யுவதிகளுக்கு வாக்களிப்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் தேசிய தேர்தல் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.
தற்போது உள்ள வாக்காளர் இடாப்பில் இவ்வாறு 18 வயதை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளின் பெயர்களை உள்ளடக்கும் விசேட பிரேரணை ஒன்றை ஆணைக்குழு தயாரித்துள்ளது.
சட்டத்தரணி நிமால் புஞ்சிஹேவவின் அறிவுரைக்கு அமைய இது தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணைக்கு சட்ட மா அதிபரின் அனுமதி கிடைக்கப் பெற்ற பின் ஜனாதிபதியிடம் அது சமர்ப்பிக்கப்படும்.
இந்தப் பிரேரணை பாராளுமன்றத்திலும் சமர்ப்பிக்கப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
18 வயதை பூர்த்தி செய்த இளைஞர் யுவதிகளின் பெயர்களை நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தமது பிரதேசத்து கிராம உத்தியோகத்தர் மூலம் வாக்காளர் இடாப்பில் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்பு இதன்மூலம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தப் பெயர்கள் இடாப்பில் உள்ளடக்கப்பட்ட பின்னர் எதிர்காலத்தில் இடம்பெறும் அனைத்து தேர்தல்களிலும் இவர்கள் வாக்களிக்க தகுதி பெறுவர்.