உலக வாழ் இந்து மக்களால் இன்றைய தினம் சிவபெருமானுக்கு உரிய நாளான மஹா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
மகா சிவராத்திரி, ஆண்டு தோறும் மாசி மாதம் கிருஷ்ணபட்ச தேய்பிறை சதுர்த்தி திதியின் இரவில் கொண்டாடப்படுகிறது.
இதற்காக மக்கள் விரதம் இருக்கும் முறைகளும் பின்பற்றப்படுகின்றன.
இதற்கமைய இன்றைய தினம் நாட்டில் உள்ள தொன்மை மிக்க சிவ தளங்கள் உள்ளிட்ட பல ஆலயங்களில் விசேட பூஜை வழிப்பாடுகள் இடம்பெறுகின்றன.
இந்தநிலையில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ள சிவராத்திரி தின வாழ்த்து செய்தியில், இந்த சிவராத்திரி தினத்தில் ஏற்றப்படும் தீப ஒளியினால் உலகத்தின் இருள் நீங்குவதை போன்றே, உலக வாழ் இந்து மக்களின் இதயங்களிலும் இருள் நீங்கி ஒளி பெற்று வாழ தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மஹா சிவரார்த்திரி தினத்தை முன்னிட்டு நாளைய தினம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண ஆளுநர்களினால் அதற்கான பணிப்புரைகள் விடுக்கப்பட்டுள்ளன.
அந்த தினத்திற்கான பாடசாலை நடவடிக்கையை பிரிதொரு தினத்தில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.