சுவிஸ் நாட்டில் அகதி விண்ணப்பம் கோரும் நபர்கள் தொடர்பாக இம் மாதம் 01ஆம் திகதி முதல் புதிய சட்டங்கள் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவுள்ளதாக பேர்ண் மாவட்டத்தின் அங்கீகரிக்கப்பட்ட மொழிபெயர்ப்பாளர் நந்தினி முருகவேல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளதாவது,
01.03.2019 இற்கு முன்னர் சுவிஸ் நாட்டில் ஏதிலி (அகதி) விண்ணப்பத்தை மேற்கொண்ட அனைவருக்கும் இதுவரை இருந்தது போலவே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வழங்கப்படும்.
01.03.2019 இற்குப் பின்னர் அகதி விண்ணப்பம் கோருபவர்கள், அகதி விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கு என சுவிஸ் நாட்டில் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
இவ் 17 அகதி விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் இடங்களில் ஏறக்குறைய 4000 நபர்கள் தங்கலாம்.
இவ் இடங்களில் தங்கி அகதி விண்ணப்பங்களை மேற்கொண்டவர்களுக்கு 140 நாட்களுக்குள் அகதி விண்ணப்பம் தொடர்பான முடிவுகள் வழங்கப்படும். 140 நாட்களுக்குப் பின் வழங்கப்படும் முடிவுகள் எதிர்மறையானதாக வரும் சந்தர்ப்பத்தில் அதற்கான மேன்முறையீடு செய்யும் காலப்பகுதி 7 நாட்கள் மட்டுமே ஆகும்.
சுவிஸ்நாட்டில் அகதி விண்ணப்பம் கோரிய ஒருவர், ஏற்கனவே அகதி விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளும் ஒரு நாட்டில் அகதி விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தால் சுவிஸ் நாட்டு அரசாங்கத்தால் அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு, மேன்முறையீடு செய்வதற்கு 5 நாட்கள் மட்டுமே இதுவரையும் வழங்கப்படும்.
இவ் நடைமுறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.