பாடசாலை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் கொழும்பில் பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாடசாலை கிரிக்கெட் போட்டிகளை அடிப்படையாக கொண்டு சில ஆண்கள் பாடசாலை மாணவர்கள், பெண்கள் பாடசாலைகளுக்குள் பிரவேசித்து குழப்பங்களை விளைவித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதனால் பெண்கள் பாடசாலைகளுக்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக கொழும்பு பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயக்க தெரிவித்துள்ளார்.
பாடசாலை நேரத்தில் மட்டும் இந்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஒன்றிற்குள் இரண்டு ஆண்கள் பாடசாலை மாணவர்கள் புகுந்து குழப்பங்களை விளைவித்திருந்தனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய 34 பாடசாலை மாணவர்களை பொலிஸார் கைது செய்திருந்ததுடன், கடும் எச்சரிக்கையின் கீழ் பெற்றோரிடம் இவர்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.