கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பிரவேசம் இந்த வாரம் ஆரம்பிக்கிறது. வரும் 8ம் திகதி கண்டியில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கோத்தபாய ராஜபக்சவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது என்பதை தீவகம் நம்பகரமாக அறிந்துள்ளது.
கோத்தபாய ராஜபக்ச அரசியலுக்கு வருவாரா, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவாரா என்ற நீண்ட இழுபறி அரசியலரங்கில் மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவிற்கும், ராஜபக்ச குடும்பங்களிற்குள்ளும் நீடித்து வந்தது. இந்த குழப்பங்களிற்கெல்லாம் ராஜபக்ச குடும்பம் தற்போது தீர்வு கண்டுள்ளது.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன சார்பில், கோத்தபாய ராஜபக்சவையே களமிறக்குவதென்ற தவிர்க்க முடியாத முடிவிற்கு மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோர் வந்துள்ளனர்.
குடும்பத்திற்குள்ளும், கட்சிக்குள்ளும் நிலவிய குழப்பங்கள் முடிவிற்கு வந்ததையடுத்து, வரும் 8ம் திகதி கோத்தபாயவின் பகிரங்க அரசியல் பிரவேசம் ஆரம்பிக்கிறது என்பதை தீவகம் அறிந்துள்ளது. கோத்தபாய தரப்பு ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில், மஹிந்த ராஜபக்ச மற்றும் பஷில் ராஜபக்ச ஆகியோரும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.
இது தவிர, பொதுஜன பெரவின் பிரமுகர்கள் அனைவரையும் மேடையேற்றும் முயற்சிகள் நடந்து வருகிறது. வாசுதேவ நாணயக்கார, குமார வெல்கம போன்றவர்கள் கோத்தபாய ஜனாதிபதி வேட்பாளராக பொருத்தமற்றவர் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றனர். அவர்களையும் சமரசப்படுத்தி, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக பொதுஜன பெரமுனவிற்குள் குழப்பங்கள் கிடையாது என்ற செய்தியை, மறைமுகமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர் ராஜபக்ச குடும்பத்தினர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றும் மஹிந்த ராஜபக்ச, பஷில் ராஜபக்ச போன்றவர்கள் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாயதான் என்பதை நேரடியாக அல்லாமல், நாசூக்காகவே வெளிப்படுத்துவார்கள் என்ற தகவலையும் தீவகம் பெற்றுள்ளது. கோத்தபாய ராஜபக்ச மீது நீதிமன்ற வழங்குகள் உள்ளன. இப்பொழுதே ஜனாதிபதி வேட்பாளராக அவரை பகிரங்கப்படுத்தினால், வழக்குகள் இறுக்கப்படும் வாய்ப்புள்ளதாக ராஜபக்ச குடும்பம் கருதுவதாலேயே, நாசூக்கான இந்த நகர்வை மேற்கொள்கிறார்கள்.
மைத்திரிபாலவையே ஜனாதிபதி வேட்பாளராக்குவதென்ற முடிவில் மஹிந்த ராஜபக்ச இருந்தாலும், அண்மைய நாட்களில் கோத்தபாய ராஜபக்ச தரப்பின் அழுத்தம் அதிகரித்திருந்திருந்தது. ஜனாதிபதி வேட்பாளராக தன்னை நியமிக்காவிட்டால் தனி அணியாக போட்டியிடுவேன் என்றும் அவர் மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே கூறியிருந்ததையும் தீவக வாசகர்களிற்கு ஏற்கனவே கூறியிருந்தோம்.
இதேவேளை, கோத்தபாய ராஜபக்சவே ஜனாதிபதி வேட்பாளர் என மஹிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதால், 20வது திருத்தத்திற்கும் அவர் ஆதரவளிக்கமாட்டார் என தெரிகிறது.