சூலூர் அருகே பண தகராறில் மாமியாரை கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூலூர் அருகே உள்ள செங்கோடகவுண்டன் புதூரைச் சேர்ந்தவர் மரியதாஸ். இவரது மனைவி ஆசீர்வாதம் (வயது 48). இவர்களது மகள் அமலராணி (30). இவருக்கும் சிவக்குமார் என்பவருக்கு திருமணமாகி 6 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சிவக்குமார் தனது தொழில் தேவைக்காக 8 பவுன் தங்க நகையை அந்த பகுதியில் உள்ள வங்கில் அடகு வைத்து கடன் பெற்று இருந்தார்.
இந்த நிலையில் சிவகுமார் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு இறந்தார். இதனையடுத்து அமலாராணி கணவரின் உறவினரான ராஜேந்திரன் என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்தார். பின்னர் அமலாராணி கணவருடன் குரும்பபாளையத்தில் வசித்து வந்தார். அப்போது அமலாராணி தனது முதல் கணவர் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதற்காக ராஜேந்திரனிடம் ரூ. 1 லட்சம் கடன் வாங்கினார்.
இதனை திருப்பி தருமாறு ராஜேந்திரன் அமலாராணியிடம் கேட்டார். இதனால் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்று சமாதானம் செய்வதற்காக அமலாராணியின் தாய் ஆசீர்வாதம், தந்தை மரியதாஸ் ஆகியோர் குரும்ப பாளையத்தில் உள்ள ராஜேந்திரன் வீட்டுக்கு சென்றனர். அப்போது பணம் சம்பந்தமாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் மாமனார் மரியதாசை கல்லால் தாக்கி கீழே தள்ளினார். இதனை பார்த்த ஆசீர்வாதம் தடுக்க சென்றார். அவரையும் ராஜேந்திரன் கல்லால் தாக்கி கீழே தள்ளி விட்டார். இதில் ஆசீர்வாதத்தின் தலையின் பின் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய கணவன்- மனைவி இருவரையும அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஆசீர்வாதத்தை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மரியதாசுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமியாரை கொலை செய்த ராஜேந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.