பரணி, மகம் நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள், ஜகத்தை ஆள்வார்கள் என்று சொல்வது உண்டு. ஆனால் அனைவருக்குமே நாடாளும் யோகம் வாய்ப்பதில்லை.
பரணி ” ” மகம் ” நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் ” கஜமுகமும் ” “வாகைக்கோடுகளும்” அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும் என்கிறார் கால் கட்டை விரல் ஜோதிடர் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவிஜய் ஸ்வாமிஜி.
ஆசியாவிலேயே மிகப் பெரிய வைரவர் ஆலயத்தை, ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை அருகே, உள்ள ராட்டைசுற்றிப்பாளையத்தில் கட்டி வருகிறார் ஸ்ரீ விஜய் ஸ்வாமிஜி. கால் கட்டை விரல் ரேகைகளின் அம்சம் பற்றியும் அவர் விளக்கியுள்ளார்.
கை ரேகையினை வைத்து ஒருவருடைய கடந்தகால, நிகழ்கால, எதிர்கால வாழ்க்கையினை நாம் கணக்கிடுகின்றோம். குழந்தை எட்டி நடைபோட்டு தன் வாழ்க்கைப்பயணத்தை தொடங்குகிறது. அது முதல் அக்குழந்தை வளர்ந்து தன் வாழ்நாள் முழுவதும் கால் பாதத்தினைப் பயன்படுத்தி அவன் போகும் பாதை நல்வழி, தீயவழி, முன்னேற்றம், பின்னடைவு அனைத்தையும் வாழ்க்கையில் சந்திக்கின்றான். கைகளில் இருப்பதைப் போன்று, கால் பாதங்களிலும் ரேகைகள் உள்ளன.
கண்ணனின் கால் பெருவிரல்
ஓரடியில் உலகையே பெருமாள் அளந்ததாக ஐதீகம். மகாபாரதப் போரில் கர்ணன் கடைசியாக விட்ட நாகாஸ்திரத்திற்க்கு யாருமே தப்ப முடியாது என்ற நிலையில் தேரோட்டியாக இருந்த கண்ணன் தனது கால் பெருவிரலால் தேரை அழுத்தி அர்ச்சுணனைக் காப்பாற்றி, அதனால் மகாபாரதயுத்த களத்தின் முடிவே மாற்றி அமைந்ததாக மகாபாரதம் சொல்கிறது. கண்ணபிரானின் கட்டைவிரல்தான் மகாபாரதயுத்தத்தில் அர்ச்சுணனைக் காப்பாற்றி பாண்டவர்களின் வெற்றிக்கு காரணமாக அமைந்தது.
வாழ்க்கையை நிர்ணயிக்கும் ரேகை
கால் பெருவிரல் ரேகையில் அமைந்துள்ள பல கோடுகள் மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கின்றவை என்பது கண்கூடான உண்மை. கால் பெருவிரல் ரேகையை எடுத்து ஒவ்வொரு கோடுகளின் கணக்கீட்டினை கணித்து அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தையும், எதிர்காலத்தன்மையும் கூறலாம். பிறந்த குழந்தைகளின் கால் பெருவிரல் ரேகையை எடுத்து கணித்து அதற்கு ஏற்றார்போல் பெயர் சூட்டினால் அவர்கள் எதிர்காலம் சிறப்படையும், புகழையும் பெறுவர் என்பது நிச்சயம்.
குல தெய்வ வழிபாடு
கால் பெருவிரல் ரேகையைக் கொண்டு யார், யார் எந்தெந்த தெய்வங்களை பிரியமாக வழிபடுவர் என்பதையும், அதனால் பலன் உண்டா? – இல்லையா? என்பதையும் கணிக்க முடியும். இக்கணிப்பில் யார், யார் எந்தெந்த தெய்வங்களை வழிபட்டால் மிகப்பெரிய நற்பலன்களை அடைய முடியும் என்பதையும் கூறமுடியும். இதனால் வாழ்க்கையில்,வியாபாரத்தில் செய்யும் தொழிலில் தோல்வி கண்டவர்களுக்கும், திருமணம் தடைபட்டவர்களுக்கும், குழந்தைபாக்கியம் இல்லாதவர்களுக்கும் இன்னும் பல்வேறு பிரச்சனையில் உழன்று கொண்டிருப்பவர்களுக்கும் நல்ல தீர்வுகாண வழி கிடைக்கும்.
வெற்றிக்கு வழிகாட்டும் ரேகைகள்:
கால் பெருவிரல் ரேகைகளில் வில்வக்கோடுகள், வாகைக்கோடுகள், நாகக்கோடுகள், சங்குக்கோடுகள், சுரியக்கொடுகள், வருணக்கோடுகள், சக்கரக்கோடுகள், கத்தரிக்கோடுகள், கூர்மக்கோடுகள், அந்திமக்கோடுகள், சந்திரக்கோடுகள், குழிமுகம், கருடமுகம், கோமுகம் என இன்னும் பல்வேறு கோடுகள் பல்வேறு மனிதர்களின் கால் பெருவிரல் ரேகைகளில் மாறி, மாறி அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றுக்கு மேற்பட்ட கோடுகள் கூட ஒரே மனிதரின் கால் பெருவிரல் ரேகையில் அமைந்திருக்கும் வாய்ப்புகள் பெற்று வாழ்க்கையை உன்னத நிலைக்கு கொண்டு செல்லும்.
பணமழை பொழியும்
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் வருணக் கோடுகள் அமைந்திருக்குமானால் அவர் அதிகமாக யாருடனும் தொடர்பு கொள்ளாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பார். சதா காலமும் தன் குடும்பம் பற்றியே சிந்திப்பவர். அந்தக் கோடுகளுடன் சுரியக்கோடுகளும் அவருக்கு அமைந்து இருந்தால் அவர் எப்போதும் பணத்தில் புரளும் நிலை நாளடைவில் உருவாகும். இதுவும் ஆராய்ச்சியின் மூலம் கண்ட உண்மை. வாகைக்கோடுகள் அமையப்பெற்றவர், எல்லோருக்கும் வளைந்து கொடுப்பவர், மரியாதை மிக்கவர். ஒரு குறிக்கோளை மனதில் இரகசியமாக வைத்துக் கொண்டு வாழ்க்கையில் முன்னேறத்துடிப்பவர். அவர் எடுக்கும் முயற்சிகளில் சிறு மாற்றம் செய்தால் வளமான வாழ்க்கையைப் பெறுவது நிச்சயம். அவர் செய்ய வேண்டிய மாற்றம் அவருடைய கால் பெருவிரல் ரேகைகளின் மூலம் கண்டறிய முடியும்.
புகழ் தரும் சந்திரக்கோடுகள்:
கலை உலகம் என்கின்ற நடன, நாட்டியம், சங்கீதம், சினிமா சார்ந்த துறைகளில் உள்ளோர்களுக்கு பெண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கலச முகம் பெற்று வில்வக்கோடுகள் அல்லது சுரியக்கோடுகள் பெற்றிருந்தால் புகழின் உச்சிக்கு செல்வர். ஆண்களாக இருந்தால், கால் பெருவிரல் ரேகை கோமுகம் பெற்று சந்திரக்கோடுகள் அமைந்திருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் செல்வச்செழிப்புடன் பெரும் புகழ் பெறுவர்.
தரணி ஆளும் தகுதி எப்படி வரும்?:
” பரணி ” நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தரணி ஆள்வார்கள் என ஆருடம் சொல்வார்கள். நாட்டில் ” பரணி ” நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பல லட்சம் பேர் இருந்தும் ” தரணி ” ஆள முடியவில்லை, அதற்கான காரணம் என்ன? அவர்களுடைய கால் பெருவிரல் ரேகையில் கஜமுகமும், வாகைக் கோடுகளும்,அமையாமல் இருப்பது தான் முதற்காரணம். ஆக ” பரணி ” ” மகம் ” நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடைய கால் பெருவிரல் ரேகை அமைப்பில் ” கஜமுகமும் ” “வாகைக்கோடுகளும்” அமைந்திருந்தால் ஒரு நாட்டையே ஆளும் தகுதி அவர்களுக்குத் தானாகவே வந்து சேரும்.
செல்வம் தரும் கோடுகள்:
ஒருவரின் கால் பெருவிரல் ரேகையில் சந்திரக்கோடுகள் இருந்தால், அவர் நல்ல அறிவாளியாக இருப்பார். அந்தக் கோடுகளுடன் சக்கரக்கோடுகள் இருந்தால் அவர்கள் செல்வச்செழிப்புடன் வாழ்வர். கால் பெருவிரலில் உள்ள ஒரு சில கோடுகளும், ஒரு சில முகங்களும் ஒரு சிலருடைய நட்சத்திரங்களுக்கும், இராசிகளுக்கும், நன்மையையும், தீமைகளையும் கொடுக்ககூடியது. அந்திமக் கோடுகள் அமையப் பெற்றவர்கள் எப்போதும், அவர்கள் செய்யும் தொழில்கள், எதிரிகள் தொடுக்கும் வழக்கு, சொத்து, பணம் அல்லது பெண் சார்ந்த ஏதாவது வில்லங்க விவகாரங்களில் கோர்ட் வாசலிலேயே அடிக்கடி நிற்க வேண்டியிருக்கும்.
பௌர்ணமி வழிபாடு:
கால் பெருவிரல் ரேகையில் குழிமுகம் இருந்தால் அவருடைய வாழ்க்கை சரிவை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும். அவரது கால் பெருவிரல் ரேகையின் மூலம் அவர் எந்தத் தெய்வத்தினை எந்தெந்தப் பூஜைப்பொருட்கள் மற்றும் மலர்கள் வைத்து வழிபட வேண்டும் என்பதைக் கண்டறிந்து அதன்படி அவருக்கு உரிய நேரத்தில் பக்தி சிரத்தையுடன் மூன்று பௌர்ணமி நாட்களில் கும்பிட்டு வந்தால் அவருடைய வாழ்க்கை ஒளிமமாகும் என்கிறார் ஸ்ரீவிஜய் ஸ்வாமிஜி.