நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் யுத்தம் இடம்பெற்றபோது இங்கு இருக்கவில்லை, இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் அவருக்குத் தெரியாது வெறுமனே அவர் அறிக்கைகளை வைத்தே கருத்துக்களை தெரிவித்து வருகின்றார் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளும் குற்றம் செய்தனர் என்பது தொடர்பில் சுமந்திரன் கூறிவரும் கருத்துக்களில் உண்மைத் தன்மைகள் உள்ளதா என்பது தொடர்பில் தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், யுத்தம் இடம்பெறுகையில் எவரும் உண்மையாக செயற்பட மாட்டார்கள், போராட்ட இயக்கங்களிடம் உண்மைத் தன்மை இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவும் முடியாது.
ஐ.நா அமர்வில் விடுதலைப் புலிகளும் நான்கு குற்றங்களைச் செய்துள்ளனர் என அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் படையினரே அதிகம் குற்றம் செய்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பிரதமர் உள்ள ஒரு நாட்டில் அவர்களால் இழைக்கப்பட்ட குற்றங்களும் பிரதானமாகக் காணப்படுகின்றன.
அதேவேளை, விடுதலைப் புலிகள் குற்றம் இழைத்ததாக கூறப்படும் குற்றங்களை விசாரிப்பதற்கு அந்த அமைப்பை வழி நடத்தியவர்கள் இல்லை, அவ்வாறிருந்தால் அவர்களிடம் விசாரணை செய்யட்டும்.
ஒரு கட்டத்தில் நான்கு இலட்சத்திற்கு மேல் மக்கள் அங்குள்ளனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரி உள்ளிட்ட பலரும் தெரிவித்திருந்தனர்.
பசில் ராஜபக்ச மிகக் குறைவான ஆட்களே அங்கு இருந்தனர் என தெரிவித்தபோது ஆனந்தசங்கரி முன்னாள் ஆயர் ராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரும் குறிப்பிட்ட விடயங்கள் உண்மையானதென பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதையும் மீறி படையினர் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர், கொத்து குண்டுகள், யுத்த விமானங்களாலும் மூர்க்கத்தனமான தாக்குதல்களை மேற்கொண்டனர்.
இவ்வாறான நிலையில் யுத்தக் குற்றம் தொடர்பில் அதிகம் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் படையினரே என தெரிவித்துள்ளார்.