தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே, அரிய வகை கடல் பசுவை வெட்டி விற்பனை செய்த மீனவரை கடலோர பொலிஸார் பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
தமிழகத்தின் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள மந்திரிப்பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் அடைக்கலம் (25). மீனவரான இவர், சேதுபாவாசத்திரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இவருடைய வலையில் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினமான கடல் பசு சிக்கியது. கடல் பசு வலையில் சிக்கினால், மீனவர்கள் அதை உயிருடன் கடலுக்குள் விட்டு விடுவது வழக்கம்.
ஆனால், வலையில் சிக்கிய கடல் பசுவை கரைக்கு கொண்டுவந்த மீனவர் அடைக்கலம், அதை வெட்டி துண்டுகளாக்கி விற்பனை செய்வதாக கடலோர பொலிஸ் ஆய்வாளர் சுபாவுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடலோர காவல்துறையினருடன் அங்கு சென்று விசாரணை நடத்தியதில், அடைக்கலம் கடல் பசுவின் இறைச்சியை வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை பிடித்து, பட்டுக்கோட்டை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும், கடல் பசு இறைச்சியை விற்பனை செய்வதற்காக கொண்டுசென்ற அதே பகுதியைச் சேர்ந்த நீலகண்டன் மகன் கணேசனை தேடி வருகின்றனர். மீனவர் அடைக்கலத்திடம் பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி பரிசோதனை கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய வன உயிர் நிறுவன ஆராய்ச்சியாளர் மதுமகேஷ் கூறுகையில், “அவுரியா எனப்படும் கடல் பசு உள்ளிட்ட தடை செய்யப்பட்ட கடல் வாழ் உயிரினங்களை பிடிக்க அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவற்றை பிடிப்பதும், விற்பனை செய்வதும், இறைச்சியை வைத்திருப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்” என்றார்.