ராஜஸ்தான் மாநிலத்தில், இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியில் திங்கள்கிழமை ஊடுருவிய பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் இந்திய விமானப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ராஜஸ்தானில், இந்திய-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதியருகே காலை 11.30 மணியளவில் ஆளில்லா உளவு விமானம் ஊடுருவியது இந்திய விமானப் படையின் ராடார் கண்காணிப்பு அமைப்புக்குத் தெரியவந்தது. இதையடுத்து, பிகானீர் நகருக்கு வெளியே அமைந்துள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து “சுகோய்-30 எம்கேஐ’ ரக போர் விமானங்களை இந்திய விமானப் படை விண்ணில் செலுத்தியது. அடுத்த சில நிமிடங்களில் அந்த ஆளில்லா விமானத்தை சுகோய் போர் விமானங்கள் தாக்கி அழித்தன. நடுவானிலேயே இந்த தாக்குதல் நடந்தது.
தாக்குதலுக்குள்ளானதால் நொறுங்கிய அந்த உளவு விமானத்தின் உடைந்த பாகங்கள் பாகிஸ்தானின் தோபா மலைக் குன்றுகள் மீது விழுந்தன. உடனடியாக, பாகிஸ்தான் விமானத்தை இந்திய விமானப் படை சுட்டு வீழ்த்தியதாக இந்தியாவில் செய்திகள் பரவின.
இதேபோல், இந்திய விமானப் படை மற்றொரு வான்வழி தாக்குதலை நடத்தியிருப்பதாக, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களின் சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவின. சில வலைதளங்களில், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அப்பாஸ் கோட்டை மீது இந்திய விமானப் படை குண்டுகளை வீசியதாகவும் தகவல்கள் பரவின.
இதையடுத்து, சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களுக்கு பாகிஸ்தான் ராணுவம் மறுப்பு தெரிவித்தது. பாகிஸ்தான் பகுதியில் இந்திய விமானப் படை வான்வழியில் தாக்குதல் நடத்தவில்லை என்றும், புகைப்படங்களில் காணப்படும் பாகங்கள், பாகிஸ்தான் போர் விமானங்களுக்கு உரியவை என்றும் பாகிஸ்தான் ராணுவம் விளக்கம் அளித்தது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடித்து வரும் நிலையில், இரு நாடுகளின் படைகளும் உஷார் நிலையில் உள்ளன. இந்த நேரத்தில், பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்
ஊடுருவியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை, திங்கள்கிழமை அதிகாலை 3 மணி முதல், அக்னூர் செக்டாரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியருகே உள்ள கிராமங்கள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
சிறிய ரக பீரங்கிகள், ஆயுதங்கள் ஆகியவற்றைக் கொண்டு பாகிஸ்தான் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதல் அதிகாலை 6.30 மணி வரை நீடித்தது. இந்த மோதலில், இந்தியத் தரப்பில் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாகத் தகவல்கள் இல்லை.
இதேபோல், பூஞ்ச் செக்டாரில் மாலை 5.30 மணியளவில் சிறிய ரக பீரங்கிகளைக் கொண்டு பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.